சட்டீஸ்கர் மாநில விவசாயி வீட்டில் மூன்று கண்களுடன் பிறந்த அதிசய கன்று

ராஜ்நந்த்கான்: சட்டீஸ்கரில் விவசாயி வீட்டில் வளர்க்கப்பட்ட ஜெர்சி பசு மூன்று கண்களுடன் கூடிய கன்றுக்குட்டியை ஈன்றுள்ளது. சட்டீஸ்கரின் நவகான் லோதி கிராமத்தை சேர்ந்தவர் ஹேமந்த் சந்தல். இவர் தனது வீட்டில் ஜெர்சி பசுவை வளர்த்து வந்தார். இந்நிலையில் இந்த பசு கடந்த 13ம் தேதி கன்றை ஈன்றது. இந்த கன்றுக்குட்டிக்கு இரண்டு கண்களோடு நெற்றியில் மூன்றாவது கண்ணும் இருந்தது. இது மட்டுமின்றி 4 நாசி துவாரங்களும் இருந்தன. மேலும் வழக்கமாக கன்றுகுட்டிகளுக்கு இருப்பதை விட இதன் நாக்கு மிகவும் நீளமானதாக காணப்படுகின்றது. மூன்று கண்கள், நான்கு நாசி துவாரங்கள், நீண்ட நாக்குடன் பிறந்த இந்த கன்றை மக்கள் அதிசய கன்றுக்குட்டியாக கருதுகின்றனர். இதனை பார்ப்பதற்காக ஏராளமானோர் விவசாயி வீட்டிற்கு திரண்டனர். மூன்று கண்களோடு பிறந்துள்ள இந்த கன்றுக்குட்டியை கடவுளின் அவதாரமாக கருதி பொதுமக்கள் வழிபட்டனர். கால்நடை மருத்துவரின் உதவியோடு கன்றுக்குட்டி பரிசோதனை செய்யப்பட்டது. அதன் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: