குடியரசு தின அணிவகுப்பு விழாவில் தமிழக அலங்கார ஊர்தி ஒன்றிய அரசால் நிராகரிப்பு

புதுடெல்லி: வரும் 26ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் குடியரசுத் தின விழாவில் இடம்பெறவிருந்த தமிழக அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி பிரம்மாண்டமான நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. தலைநகர் டெல்லியை பொருத்தமட்டில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரையிலான ராஜபாதையில் பிரம்மாண்ட அணிவகுப்பு ஆண்டுதோறும் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை பல லட்சம் மக்கள் பார்த்து ரசிப்பார்கள். அதேப்போன்று இந்த ஆண்டும் நடத்தப்பட உள்ளது.

இதில் அனைத்து மாநிலங்களின் சார்பில் கலை பண்பாட்டு அலங்கார ஊர்திகள் இடம் பெறுவது வழக்கம். இதற்கான பணிகளை ஒன்றிய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிபுணர்கள் குழு தான் தேர்வு செய்கிறது. இந்நிலையில் இந்த ஆண்டு குடியரசுத் தின விழாவில் தமிழகம் உட்பட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திக்கு ஒன்றிய அரசு அனுமதி மறுத்துள்ளது. இதில் குறிப்பாக தென் இந்தியாவை பொருத்தவரையில் பாஜ ஆளும் மாநிலமான கர்நாடகாவை தவிர்த்து அனைத்தும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தின் அலங்கார ஊர்தி நான்காவது சுற்று வரையில் போயிருந்த நிலையில் தற்போது திடீரென அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆண்டு தமிழக அலங்கார ஊர்தியில் வீரமங்கை வேலுநாச்சியார், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், பாரதியார் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவங்களைக் கொண்ட அலங்கார ஊர்தி சமர்ப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அது நிராகரிப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து ஒன்றிய அரசு தரப்ப்பில் இருந்து வெளியாகியுள்ள தகவலில், ‘‘குடியரசுத் தினத்தன்று செல்லும் அலங்கார ஊர்தி அணிவகுப்பு சர்வதேச அளவில் பார்க்கப்படும் என்பதால், மிகவும் பிரபலமான சுதந்திர போராட்ட வீரர்கள் கொண்ட அலங்கார ஊர்திகளை மட்டுமே எதிர்பார்ப்பதாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேப்போன்று மேற்கு வங்க அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னதாக கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

* 75 போர் விமானங்களுடன் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி

வரும் 26ம் தேதி குடியரசு தின அணிவகுப்பில், நாட்டின் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில், 75 போர் விமானங்கள் பங்கேற்கும் பிரமாண்ட சாகச நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதாக விமானப்படையின் மக்கள் தொடர்பு அதிகாரியான விங் கமாண்டர் இந்திராணி நந்தி கூறி உள்ளார். விமானப்படை, ராணுவம், கடற்படை ஆகிய முப்படைகளை சேர்ந்த போர் விமானங்கள் ராஜபாதையில் பறந்து பல்வேறு சாகங்களை நிகழ்த்த உள்ளன. இதில், ரபேல், மிக்29கே, பி-8ஐ, ஜாகுவார், எம்ஐ-17 போன்ற போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் பங்கேற்க உள்ளன. இந்த விமானங்கள் வானில் பல்வேறு சாகங்களுடன் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்ற உள்ளன.

Related Stories: