பிரபல கதக் நடன கலைஞர் பிர்ஜூ மகராஜ் காலமானார்: பிரதமர், தமிழக முதல்வர் இரங்கல்

புதுடெல்லி: பிரபல கதக் நடன கலைஞரான பிர்ஜூ மகராஜ் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லியில் நேற்று காலமானார். பிரபல கதக் நடன கலைஞர் பிர்ஜூ மகராஜ்(84). இவர் அரசின் மிக உயர்ந்த விருதான பத்மவிபூஷன் விருதை பெற்றுள்ளார். மேலும் சிறந்த நடன ஆசிரியருக்கான தேசிய விருது உள்ளிட்ட விருதுகளையும் பெற்றவர். பிர்ஜூ மகராஜ் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் இரவு டெல்லியில் உள்ள தனது வீட்டில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் பிர்ஜூ இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பிர்ஜூவுக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் மற்றும் ஐந்து பேரப்பிள்ளைகள் உள்ளனர்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ‘இந்திய நடனத்திற்கு உலகம் முழுவதும் சிறப்பு அங்கீகாரத்தை பெற்று தந்த கதக் கலைஞர் பிர்ஜூ மகராஜின் மறைவு கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். ராகுல்காந்தி தனது டிவிட்டரில், ‘கதக் மேஸ்ட்ரோ மறைவு செய்தி கேட்டு கவலையடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல். இந்திய பாரம்பரிய நடனத்துறையில் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது. அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்’ என பதிவிட்டுள்ளார்.

* மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

‘புகழ்வாய்ந்த கதக் நடன கலைஞர் பண்டித பிர்ஜு மகாராஜ் மறைந்ததை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். கதக் கலையின் மிகச் சிறந்த தூதராக விளங்கிய அவர் வளமான ஒரு மரபை கொடையாக விட்டுச் சென்றுள்ளார். அவரது மறைவு நமது நாட்டுக்கும் கதக் கலைக்கும் மிகப் பெரும் இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆர்வலர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்’.

உனை காணாது நான்................

நடிகர் கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் திரைப்படத்தில் ‘உனை காணாது நான் இன்று நான் இல்லையே’ என்ற பாடல் இடம்பெற்றது. இந்த பாடலுக்கு நடன வடிவமைப்பு செய்தவர் மறைந்த பிர்ஜூ மகராஜ். மேலும் நடிகர் கமல் இவரிடம் தான் கதக் நடனம் கற்றுக்கொண்டார். பிர்ஜூ மகராஜ் மறைவுக்கு கமலும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: