கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாநிலங்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால் மறுவாழ்வு எப்படி அளிக்க முடியும்? உச்சநீதிமன்றம் கேள்வி

புதுடெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாநிலங்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால்  மறுவாழ்வு எப்படி அளிக்க முடியும் என நேற்று நடந்த விசாரணையின் போது உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பி உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் மூன்றாது அலையின் தாக்கம் கடந்த சில வாரங்களாக மிகவும் அதிகரித்துள்ளது. இதில் தடுப்பூசி அதிகம் செலுத்தப்பட்டுள்ளதால் உயிரிழப்பு என்பது குறைவாக காணப்படுகிறது. இருப்பினும் டெல்லி, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இறப்பு விகிதம் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த ஆய்வு மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கானது நேற்று நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது குழந்தைகள் மறுவாழ்வு தரப்பு வாதத்தில், ‘தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு கவுன்சில் மூலமாக கொரோனாவால் பெற்றறோரை இழந்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு அளிப்பது தொடர்பான கூட்டம் இந்த மாதம் 5,6,7 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. இதில் 23 மாநிலங்கள் கலந்து கொண்டது.  தமிழகம் உட்பட மீதமுள்ள சில மாநிலங்கள் பங்கேற்கவில்லை’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், ‘கொரோனாவால் பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகள் விவகாரத்தில் மாநிலங்கள் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த குழந்தைகளுக்கு எப்படி மறுவாழ்வு அளிக்க முடியும்?. அதனால் இந்த விவகாரத்தை அனைவரும் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள். மேலும் மீண்டும் ஒரு உத்தரவை இந்த விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பிக்கும் சூழலை ஏற்படுத்தி விட வேண்டாம் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தனர்.

* தடுப்பூசி கட்டாயம் இல்லை

‘நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த  வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை காண்பிக்க வேண்டிய  கட்டாயத்தில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்’  எனக் கூறி தனியார் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்தது. இந்த வழக்கில் ஒன்றிய சுகாதார அமைச்சகம் சார்பில் தாக்கல்  செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில், ‘தற்போதைய  தொற்றுநோய் சூழலை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி போடுவது மிகப்பெரிய  பொது நலன் ஆகும். அதே சமயம், எந்தவொரு நபரும் அவரின் விருப்பத்திற்கு  எதிராக தடுப்பூசி போடும்படி கட்டாயப்படுத்த முடியாது. மேலும், பொது இடத்தில் எந்தவொரு  நோக்கத்திற்காகவும் தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் காண்பிக்க வேண்டிய  வழிகாட்டுதல்களை ஒன்றிய அரசு பிறப்பிக்கவில்லை’ என கூறி உள்ளது.

Related Stories: