மகளுக்கு ரூ.3 லட்சம் கொடுத்த விவகாரம் பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து புதுச்சேரி வாலிபர் தற்கொலை முயற்சி: பெரவள்ளூரில் பரபரப்பு

பெரம்பூர்: பெரவள்ளூர் பெரியார் நகர் 5வது தெருவை சேர்ந்தவர் மேரி அமல்ராஜ் (50). 2016ல் இவரது கணவர் இறந்துவிட்டார். இவரது மகள் ரோஷ்னி (27). எழும்பூரில் ஒரு தனியார் கம்பெனியில் மேரி வேலை செய்கிறார். நேற்று மாலை 5 மணி அளவில் இவரது வீட்டின் வெளியே நின்ற 27 வயது மதிக்கத்தக்க ஒரு வாலிபர் மேரியிடம் தகராறு செய்துள்ளார். திடீரென மேரியின் கழுத்தை பிடித்து கீழே தள்ளிவிட்டு முதல் தளத்தில் மேரியின் வீட்டிற்கு சென்று கதவை சாத்திக் கொண்டார். தகவலின் பேரில் பெரவள்ளூர் இன்ஸ்பெக்டர் சூரிய லிங்கம் மற்றும் போலீசார் மேரியின் வீட்டிற்கு சென்றனர். அங்கு படுக்கை அறை கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது.

கதவை உடைத்து சென்றபோது அந்த வாலிபர் கை மணிக்கட்டு, கழுத்தில் ரத்தக் காயத்துடன் கிடந்தார். அவரை மீட்ட போலீசார் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின், ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். கத்தி ஏதும் இல்லாததால் தனது ஏடிஎம் கார்டை வைத்து கழுத்து மற்றும் கையை கிழித்துக் கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலைக்கு முயன்ற நபர் புதுச்சேரியை சேர்ந்த அரவிந்தன் (25) என்பதும், இவரும், ரோஷ்னியும் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் ஒன்றாக படித்ததும் தெரிந்தது. அப்போது, தந்தை இல்லாத ரோஷ்னிக்கு அடிக்கடி பணம் கொடுத்து உதவியுள்ளார். அந்த வகையில் அரவிந்தன் ரூ.3 லட்சம் வரை கொடுத்ததாக தெரிகிறது. இதை கடந்த 3 மாதமாக மேரியிடம் கேட்டு வந்துள்ளார். அதேபோல, நேற்று மாலையும் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். மேரி கொடுக்க மறுத்ததால் திடீரென வீட்டுக்குள் சென்று அரவிந்தன் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இச்சம்பவம் பெரவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: