நொச்சி நகர் கடற்கரை மணல் பரப்பில் சடலம் மீட்பு அரசு ஊழியர் மர்ம சாவு

சென்னை: சென்னை மெரினா அருகே உள்ள நொச்சி நகர் கடற்கரை மணல் பரப்பில் நேற்று காலை பொதுமக்கள் நடைபயிற்சி மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வாலிபர் ஒருவர் மணலில் அசைவின்றி கிடந்தார். இதுகுறித்து பொதுமக்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார், மணலில் கிடந்த நபரை பரிசோதனை செய்தனர். அதில், அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. போலீசார் அவரது சட்டை பையில் இருந்த அடையாள அட்டையை பார்த்த போது, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள தமிழ்நாடு தேர்வுகள் துறை இயக்குனரக அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்து வரும் ஜெகதீசன் (35) என தெரியவந்தது. அவரது உடலில் எந்த காயங்களும் இல்லை. ஆனால் அதிகளவில் மதுகுடித்து இருந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் ஜெகதீசன் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக யாரேனும் அவரை கொலை செய்தார்களா அல்லது போதை தலைக்கேறி இறந்தாரா என்று விசாரிக்கின்றனர். இருப்பினும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் ஜெகதீசன் இறப்பு குறித்து முழுமையாக தெரியவரும்  என்று போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: