2வது முழு ஊரடங்கில் சோதனை விதிமுறை மீறியதாக 929 வாகனங்கள் பறிமுதல்: ரூ.8.9 லட்சம் அபராதம்

சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் பிறப்பித்துள்ளது. 2வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. சென்னை முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள், பூங்காக்கள், திரையரங்குகள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டிருந்தது. மேலும், மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் கடற்கரை என அனைத்து இடங்களிலும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. முக்கிய சாலைகள் வாகனங்கள் இன்றி வெறிச்சோடின. ஊரடங்கு தடையை மீறி வெளியே வரும் நபர்களை கண்காணிக்கும் வகையில் சென்னை மாநகர போலீஸ் சார்பில் 312 இடங்களில் வாசன சோதனைச்சாவடிகள், தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் 32 இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள், ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் 109 என மொத்தம் சென்னை முழுவதும் 457 சோதனைச்சாவடிகள் அமைத்து போலீசார் விடிய விடிய தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அரசு உத்தரவை மீறி 31 மணி நேரம் முழு ஊரடங்கின் போது விதி மீறி வெளியே சுற்றியதாக சென்னை முழுவதும் 643 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றியதாக 3,947 பேர் மீது வழக்கு பதிவு செய்து 7 லட்சத்து 89 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் வெளியே சுற்றியதாக 40 பேர் மீது வழக்கு பதிவு செய்து ரூ.20 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. விதிகளை மீறிய நபர்களிடம் இருந்து 877 பைக்குகள், 27 ஆட்டோக்கள், 25 லகு ரக வாகனங்கள் என மொத்தம் 929 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: