குறும்படம் எடுக்க ரூ.30 லட்சம் பணம் தேவைப்பட்டதால் தெலங்கானாவிற்கு கடத்தியதாக நாடகமாடிய சென்னை வாலிபர்: போலீசார் கடுமையாக எச்சரித்து பெற்றோரிடம் அனுப்பி வைத்தனர்

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி ராம்நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பென்சிலய்யா(54). தொழிலதிபரான இவருக்கு, மனைவி ஜெயலட்சுமி, மகன்கள் ஆகாஷ்(26), கிருஷ்ணபிரசாத்(24) ஆகியோர் உள்ளனர். பென்சிலய்யா கடந்த 13ம் தேதி தனது இளைய மகன் கிருஷ்ணபிரசாத்துடன் வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க வந்தனர். வணிக வளாத்தில் வந்த இளைய மகன் கிருஷ்ணபிரசாத் திடீரென மாயமானார். மகன் வைத்திருந்த செல்போனும் வேலை செய்யவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் வணிக வளாகம் முழுவதும் தனது மகனை தேடியும் கிடைக்கவில்லை. பிறகு சம்பவம் குறித்து தொழிலதிபர் பென்சிலய்யா வடபழனி காவல் நிலையத்தில் மகன் மாயமானதாக புகார் அளித்தார்.

அதன்படி போலீசார் காணவில்லை என்று வழக்குப் பதிவு செய்து மாயமான வாலிபரின் புகைப்படைத்தை வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.  இதற்கிடையே மாயமான கிருஷ்ணபிரசாத் செல்போனில் இருந்து அவரது தந்தையான பென்சிலய்யாவுக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த செய்தியில் ‘உங்கள் மகனை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம், உயிருடன் உங்கள் மகன் வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் பணம் கொடுத்தால் விடுவிக்கிறோம்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து பென்சிலய்யா வடபழனி போலீசாரிடம் செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியை காட்டியுள்ளார். அதன்படி வடபழனி இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையிலான குழுவினர் சைபர் கிரைம் உதவியுடன், மாயமான கிருஷ்ணபிரசாத் பயன்படுத்திய செல்போனை கண்காணித்தனர். அப்போது தெலங்கானா மாநிலம் செகந்திரபாத்தில் இருப்பதாக செல்போன் சிக்னல் காட்டியது.

உடனே இன்ஸ்பெக்டர் தலைமையிலான தனிப்படை போலீசார் செகந்திரபாத்திற்கு சென்று அங்குள்ள பெட்ஷீராபாத் போலீசார் உதவியுடன் ஓட்டலில் தங்கியிருந்த கிருஷ்ணபிரசாத்தை மீட்டனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், குறும்படம் எடுக்க ரூ.30 லட்சம் பணம் தேவைப்பட்டது. பணம் கேட்டால் எனது தந்தை கொடுக்க மாட்டார். எனவே வடபழனி வணிக வளாகத்திற்கு வந்தபோது தந்தையிடம் இருந்து தப்பித்து தெலங்கானா மாநிலம் செக்ந்திரபாத்திற்கு வந்து தன்னை கடத்தியதாக எனது தந்தையின் செல்போன் வாட்ஸ் அப்புக்கு குறுஞ்செய்தி அனுப்பி நாடகமாடியதாக தெரிவித்தார்.  பின்னர் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து வாலிபர் கிருஷ்ணபிரசாத்தை கடுமையாக எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.

Related Stories: