நாகை அருகே வாகன சோதனை போலீஸ் லத்தியை வீசியதில் வாலிபர் மண்டை உடைந்தது

நாகை: நாகை அருகே வாகன சோதனையில் நிற்காமல் சென்ற பைக் மீது போலீஸ்காரர் லத்தியை வீசியதில் வாலிபருக்கு மண்டை உடைந்தது. நாகை மாவட்டம் நாகூர் அருகே மேலவாஞ்சூர் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நாகை மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நாகை கீச்சாங்குப்பத்தை சேர்ந்த சசிக்குமார்(32), பாலமுருகன்(32) ஆகியோர் பைக்கில் வந்தனர். சந்தேகத்தின் பேரில் போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது பின்புறம் அமர்ந்து இருந்த பாலமுருகன் பைக்கில் இருந்து இறங்கினார். இதில் அவர், மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்கள் கீழே விழுந்து உடைந்தது. இதை பார்த்து பயந்து போன சசிக்குமார், திடீரென பைக்கை எடுத்துகொண்டு தப்பிக்க முயற்சி செய்தார். அப்போது போலீஸ்காரர் ஒருவர், தனது கையில் வைத்திருந்த லத்தியை எடுத்து பைக் மீது வீசினார். இதில் சசிகுமார் தலையில் லத்தி பட்டு மண்டை உடைந்தது. இதில் ரத்த காயங்களுடன் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: