கண் பரிசோதனை நிபுணர் பயிற்சிக்கு கட்டணம் செலுத்த முடியாமல் மாணவி தூக்கிட்டு தற்கொலை: களியக்காவிளை அருகே சோகம்

குழித்துறை: களியக்காவிளை அருகே தனியார் நிறுவனத்தில் கண் பரிசோதனை நிபுணர் பயிற்சிக்கான கட்டணம் செலுத்த முடியாத மன வருத்தத்தில் மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே கழுவன்திட்டை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின். இவரது மகள் பிரின்சி (19). தனியார் இன்ஸ்டிடியூட் ஒன்றில் கண் பரிசோதனை நிபுணருக்கான டிப்ளமோ 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் மாடியில் உள்ள தனது படுக்கை அறைக்கு சென்றார். திடீரென ஏதோ சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது, படுக்கை அறையில் பிரின்சி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். தகவலறிந்து களியக்காவிளை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கல்வி கட்டணம் ரூ.21 ஆயிரம் செலுத்த வேண்டி உள்ளதாகவும், இந்த பணத்தை கட்ட முடியாததால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: