வேறுபாடுகளை களைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதனை படைத்துள்ளார்: பெங்களூரு புகழேந்தி பேட்டி

ஓசூர்: வேறுபாடுகளை களைந்து எறிந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சரித்திர சாதனையை படைத்துள்ளார் என அதிமுக முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி தெரிவித்தார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆரின் 105வது பிறந்த நாளையொட்டி, ஓசூர்-ராயக்கோட்டை சாலை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு, கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் கருத்து வேறுபாடுகளை களைந்து, எம்ஜிஆரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட ஆணையிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சரித்திர சாதனை படைத்துள்ளார். ஆனால், எம்ஜிஆருக்கு யார் விழா எடுத்திருக்க வேண்டுமோ அவர்கள் விழா எடுக்கவில்லை. நாவலருக்கு திமுக சிலை எடுக்கிறது. ஆனால் நாவலருக்கு சிலை எடுக்க வேண்டியவர்கள் யார்?. திராவிட இயக்க வரலாறுகளில் எம்ஜிஆரும், கலைஞரும், நாவலரும், மற்றவர்களும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழியில் தங்களை நினைத்து வாழ்ந்து இருக்கிறார்கள். பிரதமர் மோடி பெயரளவில் தமிழ் பேசுகிறார். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இரண்டு நிமிடங்கள் தமிழில் பேசும் பிரதமர், தமிழக அரசின் ஊர்தியை புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது. பாரதியின் கருத்துக்களை ஒப்புக் கொண்ட மோடி, அரசின் ஊர்தியை குடியரசு தினவிழாவில் புறக்கணிப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.

Related Stories: