திருவண்ணாமலையில் தடையை மீறி பவுர்ணமி கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்: கோயிலிலும் தரிசனத்துக்கு அனுமதி இல்லை

திருவண்ணாமலை: கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பதாலும், 3வது அலை தீவிரமடைந்திருப்பதாலும், திருவண்ணாமலையில், தை மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து, பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், தை மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 4.14 மணிக்கு தொடங்கி, இன்று காலை 6 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கிரிவலம் செல்ல முயன்றனர். ஆனால், கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் கிரிவலப் பாதை வழியாக செல்ல முயன்றவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். எனவே, கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பவுர்ணமி நாளில் பக்தர்கள் வெள்ளத்தில் நிரம்பியிருக்கும் கிரிவலப்பாதை, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. மேலும், அண்ணாமலையார் கோயிலில் கடந்த 14ம் தேதி முதல் இன்று வரை பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயிலில் வழக்கமான வழிபாடுகள், ஆறுகால பூஜைகள் மட்டும் தடையின்றி நடக்கிறது. பக்தர்கள் கோயிலுக்குள் செல்வதை தடுக்க, ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுர நுழைவாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் ராஜகோபுரம் எதிரில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: