தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த 6 மாணவர்கள் மூழ்கி பலி: கோயிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்

தாராபுரம்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் குளித்த 6 மாணவர்கள் நீரில் மூழ்கி பலியாகினர். திருப்பூர் மாவட்டம் இடுவாய் அருகே அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்தவர்கள் 2 வேன்களில் திண்டுக்கல் மாவட்டம், மாம்பறை பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோயிலுக்கு நேற்று காலை சென்றனர். சாமி தரிசனம் செய்துவிட்டு, மாலையில் இடுவாய்க்கு திரும்பிக்கொண்டிருந்தனர். ஒரு வேனில் அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் அமிர்தகிருஷ்ணன் (18), ஸ்ரீதர் (17), யுவன் (19), மோகன் (17), சக்கரவர்மன் (18), ஜீவா (18), சரண் (17), கல்லூரி மாணவர் ரஞ்சித் (20) ஆகிய 8 பேர் சென்றனர். மற்றொரு வேனில் பெரியவர்கள் சென்றனர்.

மாலை 4 மணிக்கு தாராபுரம் அமராவதி ஆற்று பகுதிக்கு வேன் வந்தது. ஆற்று தண்ணீரை பார்த்த மாணவர்கள் அதில் குளிக்க விரும்பினர். எனவே வேனில் வந்த பெரியவர்களை திருப்பூருக்கு செல்லும்படி கூறிய அவர்கள், தாங்கள் ஆற்றில் குளித்துவிட்டு வருவதாக தெரிவித்தனர். பின்னர் 8 பேரும் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். திடீரென ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று திரும்ப முடியாமல் தவித்து, கூச்சலிட்டார்.  அதிர்ச்சி அடைந்த மற்றவர்கள் அவரை காப்பாற்ற சென்றனர். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர்களும் மூச்சு திணறி போராடினர். உடனடியாக அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி 8 பேரையும் மீட்க போராடினர்.

தகவலறிந்து தாராபுரம் தீயணைப்பு படையினரும் வந்தனர். அதற்குள் மாணவர்கள் அமிர்தகிருஷ்ணன், ஸ்ரீதர், யுவன், மோகன், சக்கரவர்மன், ரஞ்சித் ஆகிய 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜீவா, சரண் ஆகியோர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தாராபுரம் அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இதில், அமிர்தகிருஷ்ணன் திருப்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் பிளஸ் 2 படித்து வந்தார். ஸ்ரீதர், மோகன் ஆகியோர்  பிளஸ் 1ம், சக்கரவர்மன் பிளஸ் 2வும், ரஞ்சித் கல்லூரியில் முதலாமாண்டும்  படித்து வந்தனர். ஒரே நேரத்தில் 6 மாணவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் இடுவாய் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

* தடுப்பணையில் மூழ்கி 3 பெண்கள் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா இனாம் அகரம் கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(55). சென்ட்ரிங் தொழிலாளி. நேற்று இவர், மனைவி பத்மாவதி (40), மருமகள் ரஞ்சிதா (25) மற்றும் அக்காள் மகள்கள் ரேணுகா என்கிற லெட்சுமி (21), ராதிகா (25), அண்ணன் பேத்தி புவனேஷ்வரி (10), பக்கத்து வீட்டை சேர்ந்த சுப்ரமணியன் மகள் சகுந்தலா என்கிற சவுந்தர்யா (16) ஆகியோருடன் சென்று இனாம் அகரம் கிராமம் அருகே வெள்ளாற்றில் புதிதாக கட்டப்பட்டு வரும் தடுப்பணையில் குளித்துள்ளார். கடைசியாக பத்மாவதி கரையேறும்போது கால்வழுக்கி நீரில் மூழ்கினார். நீச்சல் தெரியாமல் கைகளை காட்டி காப்பாற்றும்படி சைகை செய்யவே கணவர் ராமர், சவுந்தர்யா, லெட்சுமி ஆகியோர் உள்ளே குதித்து காப்பாற்ற முயன்றனர். இதில் சவுந்தர்யா, லெட்சுமி ஆகியோரும் மூழ்கினர். பின்னர் மூவரது சடலங்களும் மீட்கப்பட்டன.

Related Stories: