தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கான சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.6,230 கோடி விடுவியுங்கள்: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: வடகிழக்கு பருவமழையின் காரணமாக தமிழகத்துக்கு ஏற்பட்ட வெள்ள சேதங்களுக்கான சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.6,230 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதியுள்ள கடிதம்: 2021 வடகிழக்கு பருவமழையின்போது தமிழ்நாட்டில் வரலாறு காணாத மழை பெய்து சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில் வெள்ளத்தை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக சென்னை மற்றும் மாநிலத்தின் பிற பகுதிகளில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்பட்ட சேதாரங்களுக்கான நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை நிறைவேற்ற ஒன்றிய அரசிடமிருந்து ரூ.6230.45 கோடி நிதி உதவி கோரி தனது அரசால் 3 முறை கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 பெருந்தொற்றின் மூன்றாவது அலை ஏற்கனவே பரவியுள்ள சூழலில், தொற்றுநோயை எதிர்த்து போராடுவதற்கான முயற்சிகளை மாநில அரசு முழுமையாக முடுக்கிவிட்டுள்ளது. மேலும், இதற்கான பெரும் நிதி தேவை மாநில நிதிநிலையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடிய அதே வேளையில், கொரோனா கட்டுப்படுத்துதலுக்காக விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு விதிமுறைகள், ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயரத்தை மேலும் கூட்டுவதாக அமைந்துள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கும் மாநில நிதியில் இருந்து இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

எனவே, வெள்ள சேதங்களுக்கான சீரமைப்பு பணிகளுக்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக நிதி விடுவிக்கப்பட்டால் அது மாநில மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும். தமிழ்நாட்டிற்கு விரைந்து நிதியுதவி அளிப்பதற்கு தாங்கள் உதவிட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் முதல்வர் கூறியுள்ளார். டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தலைவர் டி.ஆர்.பாலு நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் சந்தித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை வழங்கினார்.

Related Stories: