பழுதடைந்த கருவிகள் இருப்பதாக கூறிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அதிரடி மாற்றம்: ஒன்றிய அரசின் நடவடிக்கையால் பரபரப்பு

சென்னை: சென்னையில் வானிலை ஆய்வு மைய கருவிகள் பழுது ஏற்பட்டுள்ளதால் உடனடியாக மாற்ற வேண்டும் என்று திமுகவினர் கோரிக்கை விடுத்தநிலையில், கருவிகள் பழுது ஏற்பட்டதால், மழையை கணிக்க தவறி விட்டதாக கூறிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக பணியாற்றி வந்தவர் புவியரசன். இவர், நேற்று அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வானிலை ஆய்வு மையமானது நுங்கம்பாக்கம் கல்லூரிச்சாலையில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில், ஐதராபாத், பெங்களூரு மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் அமையப்பெற்றுள்ள மூன்று வானிலை ஆய்வு மையங்கள் சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த வானிலை ஆய்வு மையங்கள் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கு சேவையாற்றி வருகின்றன. இந்தநிலையில் தமிழகத்தில் நிறுவப்பட்டுள்ள வானிலை ஆய்வு கருவிகள்(ரேடார்) பழுது ஏற்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக மாற்ற வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மேலும், மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறனும் கடிதம் எழுதினார்.

இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்னர் திடீரென்று சென்னையில் மழை கொட்டியது. எதிர்பாராமல் மழை கொட்டியதால், சென்னை நகரமே வெள்ளக்காடானாது. இதற்கு முறையான அறிவிப்பு வெளியிடாததே காரணம் என பல தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பேட்டியளித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், மறுநாள் மழை பெய்யும் என்று கணித்திருந்தோம். ஆனால், முதல் நாளே மழை பெய்து விட்டது. இதற்கு வானிலை ஆய்வு மைய கருவிகள் சரியாக இயங்காததுதான் காரணம் என்று கூறியிருந்தார். இதனால்தான் கருவிகளை மாற்ற வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியிருந்தார். உண்மையை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஒப்புக் கொண்டதால், மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிப்பதாக சமூக வளைதலங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தநிலையில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: