குடியரசு தின அணிவகுப்பில் விடுதலை போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தியை அனுமதிக்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: புதுடெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காக போராடிய வ.உ.சி, பாரதியார், ராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டிருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: புதுடெல்லியில் வரும் 26ம் தேதி நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் சிலைகள் அடங்கிய ஊர்தி இடம்பெறவில்லை என்பது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குடியரசு தின அணிவகுப்பில் ‘ விடுதலை போராட்டத்தில் இந்தியா 75, சாதனைகள், தீர்வு’ ஆகிய தலைப்புகளில் காட்சிப்படம் மற்றும் ஊர்திகளை அமைக்க பாதுகாப்பு துறை முடிவு செய்துள்ளது. இந்த அணிவகுப்பில் ‘விடுதலை போராட்டத்தில் தமிழ்நாடு’ என்ற கருத்தில் தமிழக அரசு சார்பில் ஊர்தியை பங்குபெறச்செய்வதற்கான வரைபடம் அனுப்பப்பட்டது.

விழா நிகழ்ச்சிகளுக்கான தேர்வு குழுவின் நிபுணர் குழுவை தமிழகத்தின் பிரதிநிதிகள் 3 முறை சந்தித்துள்ளனர். முதல் சந்திப்பின்போது தமிழகத்தின் பங்களிப்பு தொடர்பான ஏற்பாடும், ஊர்தி மற்றும் படங்களும் திருப்தி அளிப்பதாக நிபுணர் குழு தெரிவித்துள்ளது.  அப்போது, ஆங்கிலேயர் ஆட்சியில் விடுதலைக்காக போராடிய தமிழகத்தை சேர்ந்த வீரர்களின் சிலைகள் ஊர்தியின் முன்பகுதியிலும், கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஊர்தியின் பின்பகுதியிலும் அமைப்பது குறித்து நிபுணர் குழு திருப்தி தெரிவித்தது.

இந்தியாவின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்போராட்ட பல வீரர்களில் வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், வீரமங்கை வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் ஆகியோரின் சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஊர்திகளுக்கு அனுமதி மறுத்திருப்பது ஏமாற்றத்தை அளிக்கிறது. இது தமிழக மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட பல்வேறு டிசைன்களில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற தேர்வு குழுவினரின் கருத்தையும் ஏற்று டிசைன்களில் மாற்றம் செய்யப்பட்டிருந்தும் தமிழகத்தின் பங்களிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான 4வது கூட்டத்தில் கலந்துகொள்ள தமிழகத்திற்கு அழைப்பு மறுத்துள்ள நிலையில் அணிவகுப்பிற்கான இறுதி பட்டியலில் தமிழக அரசின் பெயரும் இடம்பெறவில்லை. தமிழக மக்களின் முக்கிய பெருமையான இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு தமிழகத்தை சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்களின் உருவங்கள் வைக்கப்பட்டுள்ள அலங்கார ஊர்தி குடியரசு தின பேரணியில் கலந்துகொள்ள அனுமதிக்குமாறும் பேரணியின் பட்டியலில் தமிழகத்தின் ஊர்தியை சேர்க்குமாறும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: