உள்நாட்டு தொழில்நுட்பங்களை உருவாக்கும் திறன்களை அதிகரிப்பதே உடனடி குறிக்கோள்: சென்னை ஐஐடி புதிய இயக்குனர் காமகோடி தகவல்

சென்னை: சென்னை ஐஐடியின் இயக்குநராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியின் இரண்டாண்டு  பதவிக்காலம் நிறைவடைந்தது. இதையடுத்து சென்னை ஐஐடியில் கணிப்பொறித்துறையில் பணியாற்றி வரும் வி.காமகோடி, அந்தப் பதவிக்கு  நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து டீன் ஜேன் பிரசாத், பதிவாளர் மற்றும் பிற அதிகாரிகள் முன்னிலையில் அவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஐஐடி சென்னையின் ஆளுநர்கள் குழுவின் தலைவர் பவன் கோயங்கா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவரும், பேராசிரியருமான காமகோடி, தற்போது சென்னை ஐஐடியின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சிக்கான (ஐசிஎஸ்ஆர்) இணை தலைவராக உள்ளார். இவர் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியத்திலும் உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக காமகோடி கூறுகையில், “ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எங்களின் அதிநவீன பணியின் மூலம், அரசின் ஒத்துழைப்புடன் ஈடுபட முயற்சிப்போம். தேசம் மற்றும் மாநிலம் மற்றும் அதன் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்கும், ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பங்களிக்கவும், எமக்காக வகுத்துள்ள இலக்குகளை அடைவதற்கும், புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் வேகமாக செயல்படுவோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டு  தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கான திறன்களை அதிகரிப்பதே உடனடி குறிக்கோள். ஆன்லைன் கல்வி மற்றும் தொலைதூரக் கற்றலின் வரம்பு மற்றும் தாக்கம் மேம்படுத்தப்படும். முழுமையான பாடத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதில் பள்ளிக் கல்வி வாரியங்களுடன் இணைந்து பணியாற்றுவோம்.

உயர்தர தொழிற்பயிற்சியை இலக்காகக் கொண்ட திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். சர்வதேச மாணவர்களுக்கான தொழில் சார்ந்த எம்டெக் திட்டத்தை செயல்படுத்தப்படும். ’ எனத்தெரிவித்துள்ளார். மொபைல் கம்ப்யூட்டிங் சாதனங்கள் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்தக்கூடிய உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் நுண்செயலியான ‘சக்தி’யை வடிவமைத்து துவக்கிய ஆராய்ச்சிக் குழுவை பேராசிரியர் காமகோடி வழிநடத்தினார். மேலும் 2020ம் ஆண்டு, அப்துல் கலாம் டெக்னாலஜி இன்னோவேஷன் நேஷனல் பெல்லோஷிப் விருது, 2018ல் ஐஇஎஸ்ஏ டெக்னோ விஷனரி விருது, 2016ம் ஆண்டில் ஐபிஎம் ஆசிரியர் விருது 2013ம் ஆண்டில் டிஆர்டிஓ அகாடமி சிறப்பு விருது ஆகியவற்றை பெற்றுள்ளார்.

Related Stories: