விவசாயிகளுக்கு சிறப்பு வாக்குறுதி பாஜவை வீழ்த்துவேன் என கைப்பிடி அரிசியுடன் சபதம்: அகிலேஷ் யாதவ் அதிரடி

லக்னோ: குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன், பயிர் காப்பீடு, நிலுவை தொகை வழங்குதல் என விவசாயிகளுக்காக சிறப்பு வாக்குறுதிகளை சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிவித்தார். மேலும், பாஜவை வீழ்த்துவேன் என கைப்பிடி அரிசியுடன் சபதமும் செய்தார். உத்தரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக அடுத்த மாதம் 10ம் தேதி தொடங்க உள்ளது. கொரோனா பரவல் காரணமாக பொதுக்கூட்டம், பேரணி நடத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இம்முறை ஆளும் பாஜவுக்கு, சமாஜ்வாடி கட்சி கடும் போட்டியாக அமைந்துள்ளது. இந்நிலையில், லக்னோவில் சமாஜ்வாடி கட்சி அலுவலகத்தில் பாஜவை வீழ்த்துவதாக உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் காயமடைந்த விவசாய சங்க தலைவர் தஜிந்தர் விர்க் உள்ளிட்டோர் கைப்பிடி அரிசி, கோதுமையை ஏந்தி, ‘வரும் தேர்தலில் பாஜவை வீழ்த்துவோம்’ என உறுதிமொழி ஏற்றனர்.

இதைத் தொடர்ந்து அகிலேஷ் யாதவ் பேசியதாவது: ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்வோம். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நீர்ப்பாசன வசதி, பயிர் கடன், விவசாயிகளுக்கு பென்சன், பயிர் காப்பீடு போன்றவற்றை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும். வன்முறையில் பலியான விவசாயிகள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். இவை அனைத்தும் சமாஜ்வாடியின் தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளன. விவசாயிகள் ஒன்றுபட்டு இருந்ததால் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அதே போல நாம் ஒன்றுபட்டு பாஜவின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்’. இவ்வாறு அவர் கூறினார்.

* பாஜவுக்கு தாவிய மகிளா காங். தலைவர்

உத்தரகாண்ட் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. இந்நிலையில், அம்மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் சரிதா ஆர்யா, கட்சியிலிருந்து விலகி, மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையில் பாஜவில் இணைந்தார். நைனிடால் தொகுதி முன்னாள் எம்எல்ஏவான சரிதா, கடந்த 2017 பேரவை தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனால், இம்முறை நைனிடால் தொகுதியில் சரிதாவுக்கு காங்கிரஸ் சீட் தர விரும்பாத நிலையில், அவர் பாஜவுக்கு தாவி உள்ளார். கடந்த தேர்தலில் நைனிடாலில் சரிதாவை வீழ்த்திய சஞ்சீவ் ஆர்யா, பாஜவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

* பாஜ அமைச்சர் பதவி பறிப்பு, நீக்கம்

உத்தரகாண்டில்  அடுத்தமாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த  தேர்தலில் ஆட்சியை தக்க வைத்து கொள்ள முதல்வர் புஷ்கர் சிங் தாமி தீவிரமாக உள்ளார். தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ஹரக்சிங் ராவத் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு டிக்கெட் கேட்டு அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து ஹரக் சிங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கி முதல்வர் புஷ்கர் சிங் நேற்றுமுன்தினம் உத்தரவிட்டார். தற்போது கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இந்நிலையில் ஹரக்சிங் ராவத் காங்கிரசிலிருந்து வெளியேறியதற்கு மன்னிப்பு கோரினால் அவரை மீண்டும் காங்கிரசில் சேர்த்துக்கொள்வோம் என்று முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

* பாரபட்சம் காட்டும் தேர்தல் ஆணையம்

சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகல் உபியில் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக நேற்று முன்தினம் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘தொற்றுநோய் காலத்தில் எவ்வாறு பிரசாரம் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் டெமோ காட்ட வேண்டும். தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து கொள்வது தேர்தலின் ஆரம்பகட்டத்திலேயே தெரிகிறது’’ என்றார்.

* கோரக்பூர் பாஜ எம்எல்ஏவுக்கு அழைப்பு

அகிலேஷ் யாதவிடம் பாஜ எம்எல்ஏ ராதா மோகன் அகர்வால் குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘‘ராதாமோகன் அகர்வால் 2002ம் ஆண்டு முதல் கோரக்பூர் எம்எல்ஏவாக உள்ளார். யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்பு விழாவில் ராதாமோகன் உட்காருவதற்கு இருக்கை கூட ஒதுக்கவில்லை. இதனால் அவர் நின்று கொண்டேயிருந்தார். அவர் சம்மதித்தால் அதே தொகுதியில் சமாஜ்வாடி சார்பில் அவருக்கு டிக்கெட் வழங்கப்படும்’’ என்றார்.

Related Stories: