6 பிள்ளைகள் இருந்தும் யாரும் கவனிக்கவில்லை; 75 வயது மூதாட்டியை கொன்று 80 வயது முதியவர் தற்கொலை: கேரளாவில் சோகம்

திருவனந்தபுரம்: கேரளாவில் 6 பிள்ளைகள் இருந்தும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை யாரும் கவனிக்கவில்லை. இதனால் மனமுடைந்த முதியவர், மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே கைநகரி பகுதியை சேர்ந்தவர் ஜோசப் (80). அவரது மனைவி லீலா (75). இந்த தம்பதிக்கு 6 பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. தற்போது வெவ்வேறு நாடுகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஆனால் வயதான பெற்றோரை பிள்ளைகள் யாருமே கவனிக்கவில்லை.  எப்போதாவது ஒருமுறை யாராவது ஒருவர் வந்து பெற்றோரை சந்தித்துவிட்டு உடனே சென்று விடுவார்கள். இதனால் ஜோசப்பும், லீலாவும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இதற்கிடையே கடந்த 10 வருடத்துக்கு முன்பு லீலா புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு படுத்த படுக்கையானார். மனைவியை ஜோசப் தான் கவனித்து வந்தார். இதற்கிடையே ஜோசப்புக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கவனிக்க யாரும் இல்லாததால் 2 பேரும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தனர்.

நேற்று மாலை ஜோசப் வீட்டு முன்பு உள்ள மரத்தில் தூக்கு போட்டு இறந்த நிலையில் காணப்பட்டார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்கத்து வீட்டினர் விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் லீலா படுக்கையில் இறந்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து உடனடியாக கைநகரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஆலப்புழா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், மனைவிக்கு விஷம் கலந்து கொடுத்து ஜோசப் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. நோய்வாய்ப்பட்டதும், கவனிக்க யாரும் இல்லாததாலும் ஏற்பட்ட மனவேதனையில் முதியவர் ஜோசப் இந்த செயலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

Related Stories: