அனல் பறந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்த வீரர் கார்த்திக்குக்கு முதல்வர் சார்பாக கார் பரிசு..!

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் ஜன.14ம் தேதியும், பாலமேட்டில் ஜன.15ம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கியது. ஆன்லைன் மூலம் பதிவு செய்து முறையாக அனுமதி பெற்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கேற்றனர். காலை 6.50 மணியளவில் அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி வாடிவாசல் திடலில் அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் ஆகியோர் கொடியசைத்து போட்டிகளை துவக்கி வைத்தனர்.

முன்னதாக அமைச்சர், எம்எல்ஏ மற்றும் மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காளைகளின் உரிமையாளர்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் உட்பட அனைவரும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ்கள் வைத்துள்ளனரா என ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தது. ஜல்லிக்கட்டை முன்னிட்டு இன்று காலை முனியாண்டி, காளியம்மன், முத்தாலம்மன், அரியமலை சாமிகள் என 4 கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து வாடிவாசல் வழியாக முதலாவதாக அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி வகைகளுக்கு பாத்தியப்பட்ட காளை அவிழ்த்து விடப்பட்டது.

2வதாக அரியமலை கருப்புசாமி கோயில் காளையும், 3வதாக வலசை கருப்புசாமி கோயில் காளை உட்பட 4 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அனைத்தும் கோயில் காளைகள் என்பதால், வீரர்கள் யாரும் இந்த காளைகளை பிடிக்கவில்லை. தொடர்ந்து ஜல்லிக்கட்டு காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து, திடலுக்கு அடுத்தடுத்து பாய்ந்து வந்தன. ஒரு சுற்றுக்கு 50 பேர் என்ற எண்ணிக்கையில், மாடுபிடி வீரர்களும் முரட்டு காளைகளை அடக்க துடிப்புடன் களத்தில் குதித்தனர். வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக பாய்ந்த காளைகளுடன், மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக் கொண்டு மோதினர். காளைகளில் சில சீற்றத்துடன் களத்தில் நின்று, போக்கு காட்டின.

சில காளைகள், மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. காலை 8 மணியளவில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில் 115 காளைகள், அவிழ்த்து விடப்பட்டிருந்தன. காலை 9 மணிக்கு 2ம் சுற்று முடிவடைந்தது. இதில் 2 சுற்றுகளிலும் 224 காளைகள் களமிறக்கப்பட்டன. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டில் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்படும் அனைத்து காளைகளுக்கும் தலா ஒரு தங்கக்காசு பரிசு வழங்கப்பட்டது. தவிர வெள்ளிக்காசுகள், டூவீலர்கள், பீரோக்கள், கட்டில்கள், சைக்கிள்கள், மோதிரம், செயின் உள்ளிட்ட பரிசுகளும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் வழங்கப்பட்டன.

மேலும் பிடிபடாத சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. அதிக எண்ணிக்கையில் காளைகளை அடக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு, சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காளைகளுக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் தனிநபர் கழிப்பறைகளும் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன. அரசு அறிவித்திருந்தபடி 150 பார்வையாளர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர். வெளியூர்களில் இருந்து வரும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

ஜல்லிக்கட்டை முன்னிட்டு அலங்காநல்லூரில் மாவட்ட எஸ்பி பாஸ்கரன் தலைமையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. 8 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 1020 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 21 காளைகளை பிடித்த கருப்பாயூரணி கார்த்திக் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்தார். முதலிடம் பிடித்த கார்த்திக்குக்கு முதலமைச்சர் சார்பாக கார் பரிசாக வழங்கப்பட்டது.

18 காளைகளை பிடித்த அலங்காநல்லூரைச் சேர்ந்த ராம்குமார் 2ம் இடமும், சித்தாலங்குடி கோபாலகிருஷ்ணன் 13 காளைகளை அடக்கி 3ம் இடமும் பிடித்தனர்.

Related Stories: