மகரஜோதிக்கு பின்னரும் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள்

திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை கடந்த 14ம் தேதி நடந்தது. அன்று மாலை லட்சக்கணக்கில் குவிந்த ஐயப்ப பக்தர்கள் பொன்னம்பலமேட்டில் மகர ஜோதியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இன்று வரை பக்தர்கள் திருவாபரணத்துடன் வீற்றிருக்கும் ஐயப்பனை தரிசிக்கலாம். நாளை (18ம் தேதி) வரை பக்தர்களுக்கு நெய்யபிஷேகம் செய்யவும் அனுமதி உண்டு. அதனை தொடர்ந்து 19ம் தேதி இரவு வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியும். மறுநாள் (20ம் தேதி) காலை 6.30 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.

அன்றுடன் 2021-2022ம் வருடத்துக்கான மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடைகிறது. வழக்கமாக மகரவிளக்கு பூஜை முடிந்த பிறகு சபரிமலைக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும். ஆனால் இந்த முறை மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் கடந்த 3 தினங்களாக சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுக் கடங்காமல் உள்ளது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories: