மூத்த பத்திரிகையாளர் சாம் ராஜப்பா மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!

சென்னை : மூத்த பத்திரிக்கையாளர் சாம் ராஜப்பா மறைவிற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

மூத்த பத்திரிகையாளரும், பிரபலமான “தி ஸ்டேட்ஸ்மேன்”ஆங்கிலப் பத்திரிகையுடன் அரைநூற்றாண்டுக்கும்மேல் தொடர்பில் இருந்தவருமான திரு. சாம் ராஜப்பா அவர்கள் தனது 82-ஆவது வயதில் மறைவெய்தினார் என்ற வேதனைச் செய்தியறிந்து மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தி ஸ்டேட்ஸ்மேன்”, “தி ப்ரீ பிரஸ் ஜேர்னல்”, “இந்தியா டுடே”,          “ஏ.பி. டைம்ஸ்” உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில், தமிழ்நாடு அரசியல் மட்டுமின்றி, அகில இந்திய அரசியலை மிக உன்னிப்பாக கவனித்து, அலசி ஆராய்ந்து சிறப்புக் கட்டுரைகள் - தலையங்கங்கள் எழுதிய ஆற்றல்மிகு பத்திரிகையாளர். நெருக்கடிக் காலக் கொடுமைகளை, குறிப்பாக, கேரளாவில் சித்திரவதைக்கு உள்ளாகி - காவல் நிலையத்தில் மரணமடைந்த மாணவன் ராஜன் வழக்கில் நேரடி சாட்சியைத் “தன்னைத்தானே சிறையில் அடைத்துக் கொண்டு” - சிறைக்குள் சென்று பேட்டியெடுத்து - பரபரப்பை ஏற்படுத்திய பத்திரிகையாளர்.

பத்திரிகையாளர்களுக்கு அவர் ஒரு பயிற்சி அரங்கம். அவரிடம் பயிற்சி பெற்ற பத்திரிகையாளர்கள் இன்றைக்கும் பல்வேறு பத்திரிகைகளிலும்  முன்னணிச் செய்தியாளர்களாக - ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதே பத்திரிகைத்துறையில் அவருக்கு உள்ள தனித்திறமைக்குச் சிறந்ததொரு எடுத்துக்காட்டு.முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமான திரு. சாம் ராஜப்பா - தமிழ்நாடு அரசியல் வியூகங்களை முன்கூட்டியே தனது புலனாய்வுக் கட்டுரைகள் மூலம் வெளிக் கொண்டு வந்தவர். அவரது மறைவு பத்திரிகையுலகத்திற்குப் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் உறவினர்களுக்கும், பத்திரிகைத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் - ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: