சென்னையில் விட்டுவிட்டு மழை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்தது. அதன்படி சென்னையில் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பரவலாக லேசானது முதல் மிதமான மழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதன்படி மயிலாப்பூர், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர், மெரினா, தேனாம்பேட்டை, மந்தைவெளி, கோயம்பேடு, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், வில்லிவாக்கம், ஐசிஎப், சேத்துப்பட்டு, ஜெமினி, முகப்பேர், புழல், செங்குன்றம், சோழவரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள், ஊத்துக்கோட்டை, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை 3 மணி முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை: தென்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி பதிவாகக்கூடும்.

அதேபோல் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும். மேலும் வருகிற 19 மற்றும் 20ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: