12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு மார்ச் மாதம் தடுப்பூசி செலுத்த திட்டம்: மத்திய அரசு அதிகாரி தகவல்

டெல்லி : இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் கடந்தாண்டு ஜனவரி 16ம் தேதி தொடங்கியது. கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் இரண்டு தவணைகளாக செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் சுகாதாரப் பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், அதைத் தொடர்ந்து முதியவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என படிப்படியாக தடுப்பூசி போடும் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த 3ம் தேதி முதல் 15-18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கடந்த 10ம் தேதி முதல் சுகாதார, முன்கள பணியாளர்கள், முதியவர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.

இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசி போடும் பணி தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதில், பல்வேறு சாதனைகள் படைத்துள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் பெருமை தெரிவித்துள்ளது. இதுவரை நாட்டில் 156.76 கோடி டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. 43.19 சதவீதம் பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.15-18 வயதுக்கு உட்பட்ட 3 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரத்து 912 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தகுதியுள்ளவர்களில் 93 சதவீதம் பேருக்கு முதல் டோசும், 70 சதவீதம் பேருக்கு 2 டோஸ் தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த திட்டம் பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடங்குகிறது என்று கொரோனா நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க இருக்கிறோம். 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டு டோஸ் செலுத்திய பிறகு இந்த திட்டம் தொடங்கப்படும்.இளம் பருவத்தினருக்கு தடுப்பூசி போடுவது முக்கியம். அவர்கள் பள்ளிகள், கல்லூரிகளுக்கு சென்று ஒன்றிணைந்து தொற்று நோயை பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர்,இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: