பாஜ.வின் வெறுப்பு அரசியலை வீழ்த்த நீ என்னுடன் இருப்பாயா? இளைஞர்களுக்கு ராகுல் அழைப்பு

புதுடெல்லி : ‘பாஜ.வின் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், வேலையில்லா திண்டாட்டத்துக்கு காரணமாக அமைவதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். இது குறித்து ராகுல் காந்தி இந்தியில் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பாஜ.வின் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்று நம்புகிறேன்.

மேலும், இந்த வெறுப்பு வேலையில்லா திண்டாட்டத்துக்கு காரணமாகும். சமூகத்தில் அமைதி இல்லாமல் உள்நாட்டு, வெளிநாட்டு தொழில்கள் இயங்க முடியாது. ஒவ்வொரு நாளும் உங்களை சுற்றி வளர்ந்து வரும் இந்த வெறுப்பை சகோதரத்துவத்துடன் முறியடிப்பேன். நீ என்னுடன் இருப்பாயா?’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை விநாடி வினாவை ஆன்லைனில் வெளியிட்டார். அதில், பாஜ அரசின் பெரிய குறைபாடு எது? என்று மக்களிடம் கேள்விகள் கேட்டு கருத்து கணிப்பு நடத்தினார். அதில், விருப்ப பதில்களாக  ‘வேலையின்மை, வரி பறித்தல், விலை உயர்வு மற்றும் வெறுப்பு சூழல்’ ஆகியவற்றை பதிவிட்டார். இதில், ஏராளமான மக்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கேள்விக்கான பதிலை வெளியிடும் வகையிலேயே, ராகுல் காந்தி நேற்று இந்த டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

Related Stories: