நாட்டின் பாதுகாப்புக்கு தொடரும் அச்சுறுத்தல் விமான நிலையங்கள் ஒன்றில் கூட ‘பாடி ஸ்கேனர்’ கருவி கிடையாது : கொள்முதல் டெண்டர் திடீர் ரத்து

புதுடெல்லி : இந்தியாவில் ஒன்றிய அரசின் கட்டுபாட்டில் 100க்கும் மேற்பட்ட விமான நிலையங்கள் உள்ளன. இவற்றில் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் பரிசோதிப்பதற்கு மெட்டல் டிடெக்டர்கள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. ஆனால், உலோகத்திலான ஆயுதங்கள், வெடிபொருட்களை மட்டுமே  இவற்றால் கண்டுபிடிக்க முடியும். உலோகம் அல்லாத ஆயுதங்களை  கண்டுபிடிக்க இயலாது.

வௌிநாடுகளில் விமான நிலையங்களில் பயணிகள் நுழையும்போேத, ‘பாடி ஸ்கேனர்’ எனப்படும் கருவியின் மூலம், உடல் முழுவதும் பரிசோதிக்கப்படுகிறது. இந்த கருவி உடைக்குள் ஊடுருவி, உடலின் மேல் பகுதி மட்டுமின்றி, உடலுக்குள் மறைத்து வைத்திருக்கும் பொருட்களையும் அப்பட்டமாக காட்டி கொடுத்து விடும்.

ஆனால், இன்று வரையில் இந்திய விமான நிலையங்கள் எதிலும் இந்த கருவி அமைக்கப்படவில்லை. இதனால், விமான பயணமும், நாட்டின் பாதுகாப்பும் அச்சுறுத்தலாகவே உள்ளது.  எனவே, நாட்டில் உள்ள 84 பதற்றமான மற்றும் அதிக பதற்றமான விமான நிலையங்களில் பாடி ஸ்கேனர்களை பொருத்தும்படி 2019ம் ஆண்டு பரிந்துரை செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து, 63 விமான நிலையங்களுக்கு 198 பாடி ஸ்கேனர்களை  வாங்குவதற்கு  2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டரில் 3 கம்பெனிகள் பங்கேற்ற நிலையில், டெண்டரை ஒன்றிய அரசு திடீரென நிறுத்தி வைத்தது. டெண்டர் நிறுத்தி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விமான நிலைய ஆணையத்திடம் கேட்டபோது, ‘இது முற்றிலும் அலுவல் ரீதியான நடவடிக்கையின் ஒரு பகுதி. இனி மீண்டும் புதிய டெண்டர் கோரப்பட்டு பாடி ஸ்கேனர்கள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,’ என தெரிவித்தது.

*  இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில் மொத்தம் 137 விமான நிலையங்கள் உள்ளன.

*  இவற்றில், 24 விமான நிலையங்கள் சர்வதேச விமான நிலைய அந்தஸ்து பெற்றவை.

*  ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், வட கிழக்கு மாநிலங்களில் இருக்கும் 28 விமான நிலையங்கள் அதிக பதற்றம் மிக்கவை என்றும், மேலும் 56 விமான நிலையங்கள் பதற்றமானவை என்றும் வகைப்படுத்தப்பட்டு உள்ளன.

Related Stories: