இந்தியாவில் இரண்டே ஆண்டுகளில் பெற்றோர்களை இழந்த 1.47 லட்சம் குழந்தைகள்

புதுடெல்லி : கொரோனா மற்றும் பிற காரணங்களால் 2020 ஏப்ரல் மாதம் முதல் 1.47 லட்சம் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்துள்ளனர் என்று உச்ச நீதிமன்றத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா பெருந்தொற்றால் ஏராளமான குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர்களாகி உள்ளனர்.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பற்றி புள்ளி விபரத்தை தாக்கல் செய்யும்படி, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

 இதன்படி, இந்த ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், ‘நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 1 லட்சத்து 36 ஆயிரத்து 910 சிறுவர்கள், குழந்தைகள் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்துள்ளனர்.

முழு கவனிப்பும், ஆதரவும் தேவைப்படும் சிறுவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்து 94 பேர் உள்ளனர். பெற்றோர் அல்லது உறவினர்களால் கைவிடப்பட்டவர்கள் 488 பேர் உள்ளனர். இவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 47 ஆயிரத்து 492 ஆக உள்ளது. தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகள் ஒடிசாவில் 24,405, மகாராஷ்டிராவில் 19,623, குஜராத்தில் 14,770, தமிழகத்தில் 11,014, உ.பி.யில் 9,247, ஆந்திராவில் 8,760, மத்திய பிரதேசத்தில் 7,340, மேற்கு வங்கத்தில் 6,835, டெல்லியில் 6,629 மற்றும் ராஜஸ்தானில் 6,827 பேர் உள்ளனர்.

இவர்களில் 59 ஆயிரத்து 10 பேர் 8 முதல் 13 வயதுக்கு உட்பட்டவர்கள். 22  ஆயிரத்து 763 பேர் 14 முதல் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 16-18 வயதுக்கு உட்பட்ட 22,626 பேரும், 4 முதல் 7 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் 26 ஆயிரத்து 80 பேரும் உள்ளனர். பெற்றோரை இழந்த குழந்தைகள் எந்த வகையிலும் பெருந்தொற்று காலத்தில் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: