ஆஸ்திரேலியாவுடன் கடைசி டெஸ்ட் 124 ரன்னில் சுருண்டு இங்கிலாந்து படுதோல்வி

*0-4 என தொடரை இழந்தது

ஹோபர்ட் : ஆஸ்திரேலிய அணியுடனான 5வது மற்றும் கடைசி டெஸ்டில், 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 124 ரன்னில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. இந்த வெற்றியுடன் பாரம்பரியமிக்க ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 4-0 என கைப்பற்றி அசத்தியது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி மொத்தம் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் மோதியது.

 இத்தொடரில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஆஸ்திரேலிய அணி பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்னில் நடந்த முதல் 3 போட்டியிலும் அபாரமாக வென்று 3-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. சிட்னியில் நடந்த 4வது டெஸ்டில் கடுமையாகப் போராடிய இங்கிலாந்து டிரா செய்தது.

இந்நிலையில், கடைசி டெஸ்ட் ஹோபர்டில் பகல்/இரவு போட்டியாக கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்றது. பெல்லரிவ் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 303 ரன், இங்கிலாந்து 188 ரன் எடுத்து ஆல் அவுட்டாகின. இதைத் தொடர்ந்து, 115 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா, 2ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்திருந்தது. ஸ்டீவன் ஸ்மித் 17 ரன், போலண்ட் 3 ரன்னுடன் நேற்று 3வது நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

போலண்ட் 8 ரன், டிராவிஸ் ஹெட் 8 ரன், ஸ்மித் 27 ரன் எடுத்து மார்க் வுட் வேகத்தில் அடுத்தடுத்து வெளியேற, ஆஸ்திரேலியா 28.2 ஓவரில் 63 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. கேமரான் கிரீன் - அலெக்ஸ் கேரி இணைந்து 7வது விக்கெட்டுக்கு 49 ரன் சேர்த்தனர். கிரீன் 23, ஸ்டார்க் 1 ரன்னில் பெவிலியன் திரும்ப, ஓரளவு தாக்குப்பிடித்த கேரி 49 ரன் (88 பந்து, 4 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் கம்மின்ஸ் 13 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சைல் 155 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (56.3 ஓவர்).

இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 16.3 ஓவரில் 2 மெய்டன் உள்பட 37 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். பிராடு 3, வோக்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 271 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ், ஸாக் கிராவ்லி முதல் விக்கெட்டுக்கு 16 ஓவரில் 68 ரன் சேர்த்து நம்பிக்கை அளித்தனர்.

பர்ன்ஸ் 26, மலான் 10, கிராவ்லி 36 ரன் எடுத்து கிரீன் பந்துவீச்சில் வெளியேறினர். அடுத்து வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுக்க, இங்கிலாந்து அணி 38.5 ஓவரில் 124 ரன்னுக்கு சுருண்டு 146 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அந்த அணி 56 ரன்னுக்கு 10 விக்கெட்டை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது.

ஆஸி. பந்துவீச்சில் கம்மின்ஸ், போலண்ட், கிரீன் தலா 3, ஸ்டார்க் 1 விக்கெட் வீழ்த்தினர்.  ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் தட்டிச் சென்றார். ஆஸி. அணி 4-0 என்ற கணக்கில் ஆஷஸ் தொடரை கைப்பற்றி அசத்தியது.

Related Stories: