மலையாள படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் மம்முட்டிக்கு கொரோனா

திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகர் மம்முட்டி (70), தற்போது மலையாளத்தில் கே.மது இயக்கத்தில் உருவாகும் ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ படத்தின் 5வது பாகத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 மாதங்களாக கொச்சியில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மம்முட்டிக்கு தொண்டை வலியும், லேசான காய்ச்சலும் ஏற்பட்டது. இதையடுத்து  மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்தபோது, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பை ரத்து செய்த மம்முட்டி, தற்போது தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு ஓய்வெடுத்து வருகிறார். இதையடுத்து அவரது ரசிகர்கள் பதற்றம் அடைந்து, அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். தற்போது மம்முட்டியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ‘ஒரு சிபிஐ டைரி குறிப்பு’ படத்தின் படப்பிடிப்பு  2 வாரங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தனது உடல்நிலை குறித்து மம்முட்டி நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்ட பிறகும் கூட எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது எனக்கு லேசான காய்ச்சல் மட்டுமே நீடித்து வருகிறது. மற்றபடி நான் நலமாக இருக்கிறேன்.

மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் தேவையான வழிகாட்டுதலுடன் வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வாழ்த்துகிறேன். எல்லா நேரமும் முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள். பாதுகாப்புதான் முக்கியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: