சேலத்தில் திருட்டு வழக்கில் கைதான மாற்றுத்திறனாளி மர்ம மரணம் 2 எஸ்ஐ, ஒரு ஏட்டு சஸ்பெண்ட்

சேலம், : சேலம் மாவட்டம், கருப்பூர் ஆதிதிராவிடர்காலனியை சேர்ந்தவர் பிரபாகரன்(45), மாற்றுத்திறனாளி. இவரது மனைவி சம்சலா(40). இருவரையும் கடந்த 5ம் தேதி, நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்தனர். பிரபாகரனை நாமக்கல் கிளைச் சிறையிலும், சம்சலாவை சேலம் பெண்கள் கிளைச்சிறையிலும் அடைத்தனர். சிறையில் இருந்த பிரபாகரன், உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறை வார்டர்கள் காவல் இருந்த நிலையில், கடந்த 12ம் தேதி அவருக்கு ஜாமீன் கிடைத்தது.

வார்டன்கள் சென்றுவிட அவரது உறவினர்கள் கவனித்து வந்தனர்.

ஆனால், இரவு 11.30 மணியளவில், திடீரென பிரபாகரன் உயிரிழந்தார். திருட்டு வழக்கில் கைது செய்த சேந்தமங்கலம் போலீசார் தாக்கியதில் தான், தனது மகன் இறந்துவிட்டார் என அவரின் தாய் கோவிந்தம்மாள் தெரிவித்தார்.இதையடுத்து, பிரபாகரனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உடலை வாங்க மறுத்து, சேலம் கலெக்டர் அலுவலகம் முன் மறியல் செய்தனர்.

பிரபாகரனின் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதையடுத்து சேலம் டவுன் போலீசார், பிரபாகரன் திடீர் மரணம் தொடர்பாக 176 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், சேலம் ஜே,எம்.1 மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். பிரேதப்பரிசோதனைக்கு பிறகும், போலீசார் மீது நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என உறவினர்கள் கூறினர்.

இதையடுத்து இவ்விவகாரத்தில் தொடர்புடைய போலீஸ் எஸ்ஐக்கள் சந்திரன், பூங்கொடி, ஏட்டு குழந்தைவேல் ஆகிய 3 பேரையும் சஸ்பெண்ட் செய்து, சரக டிஐஜி (பொறுப்பு) நஜ்முல்கோடா உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று காலை, பிரபாகரனின் உடலை உறவினர்கள் பெற்று அடக்கம் செய்தனர்.

Related Stories: