நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடக்க வெளிநாட்டில் சதித்திட்டம் தீட்டிய நடிகர் திலீப்

திருவனந்தபுரம் : நடிகை பலாத்கார வழக்கு விசாரணையை முடக்கவும், சாட்சிகளை வசப்படுத்தவும் நடிகர் திலீப் வெளிநாட்டில் ஒரு தொழிலதிபருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபல மலையாள நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நடந்து 5 வருடங்களாகி விட்ட நிலையில், தற்போது நாளுக்குநாள் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நடிகை பலாத்காரம் செய்யப்பட்டபோது செல்போனில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் நடிகர் திலீப்பிடம் இருப்பதாகவும், அதை அவர் சிலருடன் சேர்ந்து பார்த்தது தனக்கு தெரியும் என்றும் டைரக்டர் பாலச்சந்திர குமார் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்த வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பி உள்பட போலீசாரை கொல்ல திலீப் சிலருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவும் பாலச்சந்திர குமார் கூறினார். இதுதொடர்பாக திலீப் உள்பட 6 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து திலீப் முன்ஜாமீன் கோரி கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையே போலீஸ் தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டிருந்த நடிகைகள் பாமா, பிந்து பணிக்கர், நடிகர் சித்திக் உள்பட பலர் திடீரென்று பல்டியடித்தனர். பிறகு அவர்கள் திலீப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தனர்.

திலீப் தரப்பில் இருந்து பெருமளவு பணம் கொடுக்கப்பட்டதால்தான் அவர்கள் பல்டியடித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், பலாத்கார வழக்கு விசாரணையை முடக்கவும், சாட்சிகளை வசப்படுத்தவும் திலீப் வெளிநாட்டில் வைத்து ஒரு தொழிலதிபருடன் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாக போலீஸ் விசாரணையில் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்தபோது 2018, 2019ம் ஆண்டுகளில்  திலீப் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கத்தார் நாட்டுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வைத்து அவர் ஒரு தொழிலதிபரை சந்தித்துப் பேசியுள்ளார். அந்த தொழிலதிபர்தான் நடிகையின் பலாத்கார காட்சிகள் அடங்கிய பென்-டிரைவ்வை திலீப்பிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும், வழக்கு விசாரணையை முடக்குவதற்கு அவருடன் சேர்ந்து திலீப் சதித்திட்டம் தீட்டியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.அந்த தொழிலதிபரிடம்  விரைவில் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: