தப்பித்து சென்றதால் உரிமையாளர்கள் ஆத்திரம் கொத்தடிமையாக வாத்து மேய்த்த 2 சிறுவர்கள் மீது சரமாரி தாக்குதல்

திருவண்ணாமலை :  கொத்தடிமையாக வாத்து மேய்த்து கொண்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் தப்பித்து சென்றதால்,  திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் மடக்கி பிடித்த உரிமையாளர்கள் தாக்கிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் முருகேஷ்(50), சிவா(30). இவர்கள் இருவரும் இணைந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மேலும் இவர்கள் அதேபகுதியை சேர்ந்த 10, 15 வயதுகளில் 2 சிறுவர்களை கொத்தடிமைகளாக வைத்து வாத்துக்களை மேய்த்து வந்துள்ளனர்.

இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கத்தில் வாத்து மேய்ப்பதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுவர்களை அழைத்து வந்தனர். இந்நிலையில் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த சிறுவர்கள் இருவரும், வாத்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் கலசபாக்கத்திலிருந்து நேற்று காலை நடந்தே திருவண்ணாமலைக்கு தப்பித்து வந்துள்ளனர்.

இதனை அறிந்த வாத்து உரிமையாளர்களான முருகேஷ், சிவா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்து திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் சிறுவர்களை பிடித்து சரமாரி தாக்கி உள்ளனர். நேற்று முழு ஊரடங்கு காரணமாக ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடியிருந்தது. இதையடுத்து அங்கிருந்த ஒருசிலர் 4 பேரையும் பிடித்து, விசாரித்தனர். அதில், சிறுவர்களை கடந்த 5 மாதங்களாக கொத்தடிமையாக வைத்து வாத்து மேய்த்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, சிறுவர்கள் உட்பட 4 பேரையும் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் திருவண்ணாமலையில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: