ஷேர் மார்க்கெட்டில் ₹25 லட்சம் நஷ்டத்தால் வாலிபர் தற்கொலை : சென்னை முகப்பேரில் பரபரப்பு

அண்ணா நகர் : சென்னை முகப்பேர் 2வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவின்கார்த்திக்(34). இவர்,  ஷேர் மார்க்கெட்டில் பங்குதாரராக இருந்தார். இந்நிலையில், அவர் பல மடங்கு லாபம் கிடைக்கும் என நம்பி, ஷேர் மார்க்கெட்டில்  25 லட்சம் முதலீடு செய்து இருந்தார். எதிர்பாராதவிதமாக,  ஷேர் மார்க்கெட் சரிவை சந்தித்தது. இதன் காரணமாக, அவர் முதலீடு செய்து இருந்த  கம்பெனி சந்தித்த சரிவால் அவருக்கு 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது.   

 இதனால், மன உளைச்சலில் இருந்த கவின்கார்த்திக், தன் நஷ்டத்தை பற்றி தனது நண்பர்களிடம் சொல்லி அழுதுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றவர், கேனில் எடுத்து சென்ற பெட்ரோலை உடலில் ஊற்றி, தீ வைத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றார். உடலில் பற்றிய தீ கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனை தாங்க முடியாமல் கவின்கார்திக் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தத்தை கேட்டு, விரைந்து வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து, கவின்கார்த்திக்கை காப்பற்ற முயன்றனர். ஆனால், உடல் முழுவதும் தீ பரவியதால், படுகாயம் அடைந்த அவர் மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து, அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சை பலனின்றி, பரிதாபமாக உயிரிழந்தார்.

 இது குறித்து, தகவலறிந்த, நொளம்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சடலத்தை மீட்டு,   பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த 25 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதால் வாலிபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில், பெரும் சோகத்தையும், பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: