கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம் விஷவாயு தாக்கி வாலிபர் பலி : ஒருவர் கவலைக்கிடம்

துரைப்பாக்கம் : சென்னை வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் முத்துக்குமார்(30). இவர் கழிவுநீர் லாரி டிரைவராக வேலை செய்கிறார். இவரிடம், கும்பகோணம் சோழபுரம் கிராமத்தை சேர்ந்த திராவிட கதிரவன்(29) என்பவர் கிளினராக வேலை செய்தார். திருமணமான இவர் வெட்டுவாங்கேணியில் மனைவியுடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சென்னை ஈஞ்சம்பாக்கம் சேஷாத்திரி அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் கழிவுநீரை அகற்றுவதற்காக சென்றனர்.

இதனையடுத்து,10 அடி ஆழமுள்ள கழிவு நீர் தொட்டியில் இருவரும்  இறங்கி கழிவுநீரை அகற்றினர். அப்போது திராவிட கதிரவன் தொட்டியின் உள்ளே இறங்கி, இரும்பு கம்பியால் கழிவுநீரை வெளியே எடுப்பதற்காக கலக்கினார்.அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு அவரை  தாக்கியது.இதனால், திராவிட கதிரவன் மயங்கி தொட்டியில் விழுந்துள்ளார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துகுமார் அவரை காப்பாற்ற முயன்றார்.அப்போது அவரும் விஷவாயு தாக்கி  மயங்கி விழுந்தார். தகவலறிந்த துரைப்பாக்கம் தீயணைப்பு துறையினர் மற்றும் நீலாங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, இருவரையும் மீட்டு, உடனடியாக, ஈஞ்சம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர் திராவிட கதிரவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கிகிடந்த முத்துகுமாருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக பெரும்பாக்கம் தனியார் மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில், அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.நீலாங்கரை போலீசார் திராவிட கதிரவன் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: