×

கொரோனா தொற்றால் வீட்டு தனிமையில் உள்ள 1.51 லட்சம் பேருக்கு தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது : சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை : சென்னையில் கொரோனா தொற்றால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1,51,124 நபர்களுக்கு தொலைபேசி மூலம் 10 நாளில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதித்த நபர்கள் முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களுக்கு மாநகராட்சியின்  கோவிட் சிறப்பு வாகனங்களின் மூலம் அழைத்து செல்லப்பட்டு, பரிசோதனைகளுக்கு பிறகு தொற்று பாதிப்பு குறைவாக உள்ள நபர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலை குறித்து நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கவும், தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்தத்திற்கு ஆலோசனை வழங்கவும் சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு மண்டலத்துக்கு ஒன்று வீதம் 15 தொலைபேசி ஆலோசனை மையங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் கட்டிடத்தில் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் தொலைபேசி ஆலோசனை மையம் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

தொலைபேசி அழைப்பாளர்கள் வீட்டுத் தனிமையில் உள்ள நபர்களிடம் சளி, காய்ச்சல், இருமல், உடல்வலி மற்றும் தொண்டை வலி போன்ற கோவிட் தொற்று அறிகுறிகள் தொடர்ந்து இருக்கிறதா என கேட்டறிந்து 5 நாட்களுக்கு மேல் அவர்களுக்கு அறிகுறிகள் தொடர்ந்தால் அருகிலுள்ள மருத்துவமனைக்கு செல்ல ஆலோசனை வழங்கப்படுகிறது. மேலும், வீட்டில் கழிப்பறை வசதியுடன் கூடிய தனி அறை உள்ளதா. அவர்களின் இல்லங்களுக்கு கோவிட் தன்னார்வலர்கள் வருகிறார்களா, குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் குறித்து கேட்கப்பட்டு அதற்குரிய ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.

மண்டலங்களில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையங்களில் 21 மருத்துவர்கள், 140 தொலைபேசி அழைப்பாளர்கள் மற்றும் தலைமையிடத்தில் உள்ள தொலைபேசி ஆலோசனை மையத்தில் ஒரு துணை ஆட்சியர், 2 மருத்துவர்கள் மற்றும் சுழற்சி முறையில் பணிபுரிய 45 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தலைமையிடம் மற்றும் மண்டல தொலைபேசி ஆலோசனை மையங்களிலிருந்து கடந்த 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை கோவிட் தொற்று பாதித்து வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 1,51,124 நபர்களிடம் தொலைபேசி அழைப்புகள் மூலம் உடல்நிலை குறித்து கேட்டறியப்பட்டு மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Corona ,Chennai Corporation , Chennai Corporation,Medical advice
× RELATED சென்னை மாநகராட்சி அலுவலகங்களில்...