×

சென்னையில் கொரோனா தொற்று 2,454 தெருக்களுக்கு பரவியது : மாநகராட்சி அதிகாரிகள் தகவல்

சென்னை : சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் கொரோனா தொற்றினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் ஒரு தெருவில் கூட 25க்கும் மேற்ப்பட்டவர்களுக்கு பாதிப்பு காணப்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன்படி கடந்த 6ம் தேதி முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. குறிப்பாக மற்ற மாவட்டங்களை காட்டிலும் சென்னையில் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு மாநகராட்சி சார்பில் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வீட்டு தனிமையில் இருப்பவர்கள் மூலம் மற்றவர்களுக்கு தொற்று பரவி விடக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய  பொருட்கள், உணவுகள், மாத்திரைகள் போன்றவற்றை வாங்கி தருவதற்காக 1535  களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் சேர்த்து நேற்று முன்தினம் வரை 54,685 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் மொத்தம் உள்ள 39,537 தெருக்களில் 2,454 தெருக்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். இதில் 280 தெருக்களில் 10 முதல் 25 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதைப்போன்று 583 தெருக்களில் 6 முதல் 10 பேருக்கும், 1,591 தெருக்களில் 3 முதல் 5 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டு கட்டுப்படுத்தப்பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு தெருவில் கூட 25க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.


Tags : Chennai , Chennai, Corona Virus,2,454 Streets
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...