×

சட்டக்கல்லூரி மாணவன் கைது 2 போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்

பெரம்பூர் : சென்னை கொடுங்கையூர் எம்ஆர் நகர் சந்திப்பு அருகே கடந்த வியாழனன்று அதிகாலை கொடுங்கையூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வியாசர்பாடி புதுநகர் பகுதியைச் சேர்ந்த அப்துல்ரஹீம் (21). இவர் அவ்வழியாக சென்று கொண்டிருந்தார். மாஸ்க் அணியாமல் சென்றதால் போலீசார் அவரிடம், அதை அணியும் படி அறிவுறுத்தினர்.  அப்பொழுது போலீசாருக்கும் அப்துல் ரஹீமுக்கும்  இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.  அப்துல் ரஹீம், அங்கு பணியில் இருந்த காவலர் உத்திரக்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

உத்தரக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த கொடுங்கையூர் போலீசார்  அப்துல் ரஹீமை கைது செய்து சிறையில் அடைத்தனர். அப்துல் ரஹீமை கைது செய்த போலீசார் அவரை கடுமையாக தாக்கியதாகவும் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அப்துல் ரஹீம் தரப்பில் சென்னை மாநகர கமிஷனருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.  

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட சென்னை மாநகர கமிஷனர் அதுவரை கொடுங்கையூர் காவலர் உத்தரக்குமார் மற்றும் ஏட்டு பூமிநாதன் ஆகிய இருவரையும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து நேற்று உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : peraambur, Law College student, Police control room
× RELATED பலாத்காரம்: 2 பேர் கைது