இந்திய கடற்படை அலுவலகத்தை செல்போனில் படம் பிடித்த வடமாநில வாலிபர் சிக்கினார்

நாகை : நாகை துறைமுகத்தில் இந்திய கடற்படை போலீசாரின் முகாம் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு வாலிபர் தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தார். தடை செய்யப்பட்ட பகுதிக்குள் புகுந்து புகைப்படம் எடுத்த நபரை சந்தேகத்தின் பேரில் இந்திய கடற்படை போலீசார் அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் இந்தியில் பேசியதுடன் அவரிடம் இருந்து துறைமுகத்தின் வரைபடம், கையில் கட்டும் இரண்டு கடிகாரம், செல்போன் ஆகியவை இருப்பது தெரியவந்தது. மேலும் அவர் உத்திரபிரதேச மாநிலம் பாராகான்பூர் மாவட்டத்தை சேர்ந்த அபிஷேக்சுக்லா (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப்பற்றி நாகை எஸ்பி ஜவஹரிடம் தகவல் தெரிவித்தனர்.

எஸ்பி நேற்று நாகை இந்திய கடற்படை அலுவலகத்திற்கு சென்று அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் உத்தரபிரதேசத்தில் இருந்து ரயில் மூலம் நாகூர் வந்துள்ளார். நேற்று முன்தினம் நாகூரில் பைபர் படகில் ஏறி இரவு நாகை துறைமுகம் வந்து, துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள இந்திய கடற்படை முகாம் அலுவலகம் எதிரே அமர்ந்திருந்த அவர் தனது செல்போனில் படம் எடுத்தது தெரியவந்தது.

அவரை படகு மூலம் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் கொண்டு வந்து இறக்கி விட்டது யார்?, தீவிரவாதிகளுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை செய்ய திருச்சியில் இருந்து உளவுப்பிரிவு போலீசாரை நாகை எஸ்பி வரவழைத்துள்ளார்.

Related Stories: