மாஜி அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக பிரமுகர் கைது

*கோவில்பட்டியில் தனிப்படை சுற்றிவளைத்தது

விருதுநகர் : ஆவினில் வேலை வாங்கி தருவதாக ₹3 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதாகி, ஜாமீனில் வெளிவந்த நிலையில், முதல் குற்றவாளியான விஜயநல்லதம்பியை தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன், தனது சகோதரி மகன் ஆனந்திற்கு விருதுநகர் ஆவினில் மேலாளர் வேலை வாங்கி தருவதாகக் கூறி ₹30 லட்சம் மோசடி செய்ததாக, அதிமுக ஒன்றியச் செயலாளரும், சாத்தூர் ராமுத்தேவன்பட்டியைச் சேர்ந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் தம்பியான விஜயநல்லதம்பி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் கடந்த நவ. 15ல் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து, விஜயநல்லதம்பியிடம் விசாரித்தனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஒன்றியச் செயலாளர் விஜயநல்லதம்பி, அதிமுக உறுப்பினர் மாரியப்பன் ஆகியோருக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து மூவர் மீதும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ஆவின், சமூக நலத்துறை உள்பட பல அரசு துறைகளில் வேலை வாங்கி தருவதாகவும், சட்டமன்ற தேர்தலில் சீட் வாங்கி தருவதாகவும் ₹3 கோடியை ராஜேந்திரபாலாஜி, உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 4 பேரிடம் கொடுத்ததாக விஜயநல்லதம்பி புகார் அளித்தார். இதன்பேரில், ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ராஜேந்திரபாலாஜி கர்நாடகா மாநிலம், ஹாசனில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, ஜன. 12ல் விடுவிக்கப்பட்டார். இந்த மோசடி வழக்கின் முதல் குற்றவாளியும், ராஜேந்திரபாலாஜி மீது புகார் கொடுத்தவருமான விஜயநல்லதம்பியை, தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர், கோவில்பட்டி அருகில் புளியங்குளத்தில் உள்ள சித்தா சிகிச்சை மையத்தில் பதுங்கியிருந்து செல்போனில் பேசி வருவது சிக்னல் மூலம் தெரிய வந்தது.

 இதையடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவில், தனிப்படை போலீசார் விஜயநல்லதம்பியை சுற்றி வளைத்தனர். இதையறிந்த அவர் வெளியே வந்து போலீசாரிடம் சரணடைந்தார். நேற்று அதிகாலை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து எஸ்பி மனோகர் மற்றும் குற்றப்பிரிவு டிஎஸ்பி கண்ணன் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.

இதில், வேலை வாங்கி தருவதாக யார், யாரிடம் எவ்வளவு பணம் பெற்று ராஜேந்திரபாலாஜி மற்றும் உதவியாளர்களிடம் கொடுக்கப்பட்டது. பணம் கொடுத்தற்கான அத்தாட்சி நகல்கள், சாட்சிகள் உள்ளிட்ட தகவல்களை சேகரித்ததாக கூறப்படுகிறது.

Related Stories: