நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் : முத்தரசன் வலியுறுத்தல்

சென்னை : நகைக் கடன்கள் தள்ளுபடி நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:  கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சட்டமன்ற தேர்தலில் உறுதியளித்தது. கொரோனா நோய்த்தொற்று பரவல் கால நெருக்கடி காலத்தில் சாதாரண மக்களும், அடித்தட்டு பிரிவினரும் தங்கள் கைகளில் இருந்த நகைகளை அடகு வைத்து வாழ்க்கை நெருக்கடிகளை சமாளித்து வந்தனர்.

இவர்களுக்கு கடன் தள்ளுபடி உறுதிமொழி பெரும் நம்பிக்கை ஏற்படுத்தியது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் 2021ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி சட்டமன்றத்தில் நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டார்.அதாவது நகைக் கடன்களில் 72 சதவீதத்துக்கும் அதிகமாக கடன்கள் தள்ளுபடி இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 நகைக் கடன்களில் 10 லட்சத்து 18 ஆயிரத்து 66 கடன்கள் மட்டுமே தள்ளுபடி  செய்யப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

முந்தைய ஆட்சிகாலத்தில் கடன் வழங்குவதிலும், பெறுவதிலும்  தவறு நடந்திருப்பதை கண்டறிந்து தடுக்கப்பட வேண்டும் என்பதில் இரண்டு கருத்துக்கு இடமில்லை. அது உறுதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். அதேசமயம் குடும்ப அட்டை பெற்றுள்ள, வறுமைக் கோட்டுக்கும் கீழே வாழும் குடும்பங்கள் நகைக்கடன் தள்ளுபடி பெற தகுதியில்லை என்று அறிவித்திருப்பதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பரம ஏழையாக இருந்தாலும் சிரமப்பட்டு சேமித்து, கொஞ்சமாவது நகை வாங்குவதும் அணிவதும் தமிழர் பண்பாடு என்பதை அரசு கருத்தில் கொண்டு, ஏனைய குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கும்  5 சவரன் வரையான  நகைக் கடன்களை தள்ளுபடி செய்யும் வகையில் புதிய அரசாணை வெளியிட வேண்டும்.

Related Stories: