இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6,995 பேர் பயனடைந்தனர் : மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்

சென்னை : தமிழகத்தில் இன்னுயிர் காப்போம் திட்டம்- நம்மை காக்கும் 48 மூலம் இதுவரை 6,995 பேர் பயனடைந்துள்ளனர் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.  சாலை விபத்துகளில்  ஏற்படும் உயிரிழப்பை குறைக்கவும் விபத்து ஏற்பட்ட 48 மணி நேரத்திற்கு கட்டணமில்லாத சிகிச்சை அளிக்கும் வகையிலும் இன்னுயிர் காப்போம் திட்டம்-நம்மை காக்கும் திட்டம்-48, கடந்த டிசம்பர் 18ம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் என 609  மருத்துவமனைகள் இணைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை வழங்க வழிவகை  செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் காப்பீடு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்கள், வேறு நாட்டவர் என்ற வேறுபாடின்றி, தமிழக எல்லைகளில் விபத்தில் சிக்கும் அனைவருக்கும் 48 மணி நேர இலவச சிகிச்சை பெற  தகுதி உடையவர்கள் ஆவர்.

அதன்படி 2021ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி முதல் 31ம் தேதி வரை அரசு மருத்துவமனையில் 2,567 பேரும், தனியார் மருத்துவமனையில் 680 பேர் என மொத்தம் 3,277 பேருக்கு ₹3 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரத்து 415 வரை செலவிடப் பட்டுள்ளது. அதைப்போன்று கடந்த 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை 3,718 பேருக்கு ₹3 கோடியே 65 ஆயிரத்து 15 ஆயிரத்து 057 வரை செலவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் 18ம் தேதி முதல் ஜனவரி 12ம் தேதி வரை 6,995 பேருக்கு ₹7 கோடியே 9 லட்சத்து 65 ஆயிரத்து 472 வரை செலவிடப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக அரசு மருத்துவமனைகளில் 5,743 பேருக்கு ₹5 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 250, அதைப்போன்று தனியார் மருத்துவமனைகளில் 1,252 பேருக்கு ₹1 கோடியே 99 லட்சத்து 51 ஆயிரத்து 222 என மொத்தம் 6,995 பேருக்கு ₹7 கோடியே 09 லட்சத்து 65 ஆயிரத்து 472 வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தின் மூலம் செலவிடப்பட்டுள்ளது.  அதன்படி 71.89 சதவீதம் அரசு மருத்துவமனைகளிலும், 28.11 சதவீதம் பேர் தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: