கொரோனாவை கட்டுப்படுத்த 2வது முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடின

*மக்கள் வீட்டில் முடங்கியதால் களை இழந்த காணும் பொங்கல்

சென்னை :  கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று நடந்த 2வது முழு ஊரடங்கால் தமிழகம் முழுவதும் அனைத்து சாலைகளும் வாகனங்கள், மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது. மேலும், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், பொது மக்கள் வீடுகளில் இருந்து வெளியே செல்ல முடியவில்லை. இதனால், இந்த ஆண்டு காணும் பொங்கல் களையிழந்து காணப்பட்டது.  

முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட 2வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று அரசு விதிமுறைகளை போலீசார் கடுமையாக நடைமுறைப்படுத்தினர். ரயில், விமான நிலையம், ரயில் நிலையத்திற்கு வாகனங்களில் சென்றவர்களிடம் போலீசார், டிக்கெட்டுகளை பரிசோதனை செய்த பிறகே வாகனங்களில் செல்ல அனுமதித்தனர். தேவையில்லாமல் வெளியே சுற்றிய நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் 31 மணி நேரம் முழு ஊரடங்கால் மாநிலமே களையிழந்து காணப்பட்டது. பொங்கல் பண்டிகை என்பதால் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். ஆனால், முழு ஊரடங்கால் காணும் பொங்கலை மக்கள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது.

வழக்கமாக காணும் பொங்கல் அன்று தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்களில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்த முழு ஊரடங்கால் மாநிலம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. கோயில்கள், பூங்காக்கள், வாரச்சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டது. பொதுவாக காணும் பொங்கல் அன்று அந்தந்த ஊர் பொது இடங்களில் ஊராட்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறியடி, கபடி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெரும் நபர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு மற்றும் முழு ஊரங்கால் காணும் பொங்கலுக்கு நடைபெறும் அனைத்து போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை உட்பட மாநிலம் முழுவதிலும் இருந்து சொந்த ஊர்களுக்கு பொங்கல் விழாவிற்கு சென்ற பொதுமக்கள் அனைவருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. அனைவரும் தங்களது வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டது.

கடலூர் மாவட்ட எல்லைகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மாவட்ட எல்லைகளை ஏரிகள் மற்றும் காடுகள் வழியாக வெளியேறினர். அவர்களை போலீசார் டிரோன் மூலம் கண்காணித்து திருப்பி அனுப்பினர். தேனி மாவட்டம் கம்பத்தில் போலீசாரின் தடையை மீறி  வெளியே சுற்றிய நபர்களுக்கு உடல் பயிற்சி அளிக்கும் வகையில் தண்டால் எடுக்க கூறி போலீசார் நூதன முறையில் தண்டனை வழங்கினர்.

உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் காணும் பொங்கலுக்கு தடையை மீறி வந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதுபோல் கோவை, ஊட்டி, கொடைக்கானல், ஏலகிரி, சாத்தனூர் அணை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, நெல்லை, வேளாங்கண்ணி, திருப்பூர், சேலம், ஈரோடு, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் என தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர்கள் மேற்பார்வையில் முழு ஊரடங்கு கடுமையாக  நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதேபோல் அரசு உத்தரவுப்படி ஓட்டல்களில் பார்ச்சலுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தது. தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட சாலைகள் அனைத்து தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த முழு ஊரடங்கு பாதுகாப்பு பணியில் மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் சுழற்சி முறையில் ஈடுபட்டனர்.

சென்னையை பொறுத்தவரை, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், ெசந்தில்குமார் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் தலைமையில் மாநகரம் முழுவதும் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். காணும்  பொங்கலுக்கு சுற்றி பார்க்க மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வந்த பொதுமக்களை போலீசார் விரட்டி அடித்தனர். மெரினா கடற்கரையில் பொதுமக்களை தடுக்கும் வகையில் திருவல்லிக்கேணி உதவி கமிஷனர் பாஸ்கரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முக்கிய சாலைகளான அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி  நெடுஞ்சாலை, மதுரவாயல் நெடுஞ்சாலை, ஓஎம்ஆர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை என முக்கிய சாலைகள் என மாநகரம் முழுவதும் 312 இடங்களில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் வாசன சோதனை சாவடிகள் அமைத்து தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் 32 இடங்களில் வாகன சோதனை சாவடிகள், ஆவடி காவல் ஆணையரங்கம் சார்பில் 109 என மொத்தம் சென்னை முழுவதும் 457 ேசாதனை சாவடிகள் அமைத்து விடிய விடிய போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

Related Stories: