22ம் தேதி 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம்

சென்னை : சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கொரோனா மையத்தில் சிகிச்சை பெற்று வரும் போலீசார் மற்றும் பொது மக்களிடம் வழங்கப்படும் உணவு மற்றும் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியின்போது மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:  கொரோனா சிகிச்சைக்காக தமிழகம் முழுவதும் 1,91,902 படுக்கைகள் உள்ளன. இதுவரை 8,912 படுக்கைகள் நிரம்பியுள்ளது. சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 950 படுக்கைகள் உள்ளது. மேலும் இந்த வர்த்தக மையத்தில் கூடுதலாக 350 படுக்கைகள் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறைக்கென்று பிரத்யேகமான படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

லேசான அறிகுறி உள்ள பொதுமக்கள் மருத்துவ ஆலோசனை பெற்று தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.  அத்திப்பட்டில் 2000 படுக்கைகளுடன் கூடிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கொரோனா சிகிச்சை மையம் அமைத்து தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அங்கு தங்க வைத்து சிகிச்சை தருவதற்க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 2,050 படுக்கைகள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ளது. இதில் 203 படுக்கையில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

மேலும் 100 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கான சித்த மருத்துவ முகாம்கள் மையம் அமைக்கப்பட உள்ளது. ஒமிக்ரான் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக தொற்று பரவல் மிகுதியாக குறைந்துள்ளது. பொதுமக்கள் கட்டுப்பாடுடன் ஊரடங்கை கடைபிடித்து வருகின்றனர்.மேலும் வரும் சனிக்கிழமை 50 ஆயிரம் இடங்களில்  19-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

2 தவணை தடுப்பூசி இறப்பை தடுக்கும்

கொரோனா தொற்றில் இருந்து 100 சதவீத இழப்புகள் தடுக்க அனைவரும்  தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும். இரு தவணை தடுப்பூசி செலுத்திக்  கொண்டால் இறப்பின் விளிம்புக்கு செல்ல தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories: