பொங்கல் பண்டிகை முடிந்து திரும்புவோருக்காக இன்று 7,755 அரசு பேருந்துகள் இயக்கம் :போக்குவரத்துத்துறை நடவடிக்கை

சென்னை : பொங்கல் முடித்து திரும்புவோருக்காக இன்று 7,755 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனால் கடந்த 12ம் தேதி முதலே சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்பு, பணி, தொழில் நிமித்தமாக தங்கி இருப்போர், சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சிறப்பு பஸ்கள் அறிவிக்கப்பட்டு இயக்கப்பட்டது.

இதேபோல் தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டன. அரசு பஸ், ஆம்னி பஸ்களின் மூலமாக மட்டும் சுமார் 8 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். பொங்கல் பண்டிகை முடிவடைந்த நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் இன்று முதல் மீண்டும் நகர்புறங்களுக்கு திரும்புவார்கள். எனவே இவர்களின் வசதிக்காக இன்று தமிழகம் முழுவதும் 2,100 தினசரி பேருந்துகளும், 5,655 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 7,755 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

 இதேபோல் நாளை, நாளை மறுநாளும் தினசரி பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகளும் சேர்த்து மொத்தமாக 16,709 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை முதல் அலுவலகங்கள் திறக்கப்படவுள்ளதால் இன்று காலை முதலே மக்கள் புறப்படுவார்கள். பஸ்களில் மட்டும் அல்லாது கார்களில் சென்றவர்களும் மீண்டும் திரும்புவார்கள் என்பதால், முக்கிய சாலைகள் அனைத்திலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படும்.

Related Stories: