தொடர்பில் இருந்தவர்களுக்கு இணைநோய் இல்லாவிட்டால் கொரோனா பரிசோதனை தேவையில்லை : தமிழக பொது சுகாதாரத்துறை அறிவிப்பு

சென்னை : வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை. மேலும் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் இளம் வயதினராகவோ, இணைநோய் பாதிப்பு இல்லாதவர்களாகவோ இருந்தால் அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதில்லை என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது: தற்போது நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு, எவருக்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும், எவரெல்லாம் வீட்டுத்

தனிமையை நிறைவு செய்துகொள்ள வேண்டும் என்பன குறித்து புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுகின்றன.

அதன்படி, காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல், உடல் வலி உள்ளவர்களுக்கு கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாகவோ, இணை நோய்கள் உள்ளவர்களாகவோ இருந்தால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.

அதைப்போன்று வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். அதேநேரத்தில் கொரோனா தொற்றுடன் தொடர்பில் இருந்து அறிகுறிகள் எதுவும் தென்படாதோருக்கு பரிசோதனை தேவையில்லை. இணை நோய் இல்லாதவர்கள் மற்றும் இளம் வயதினருக்கும் பரிசோதனை அவசியமில்லை. பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயமில்லை.

வீட்டுத் தனிமையில் உள்ள தொற்று பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அறிகுறிகள் ஏற்பட்டதற்கு 7 நாட்களுக்குப் பிறகோ அல்லது சளி மாதிரிகள் கொடுத்து 7 நாட்கள் கடந்த நிலையிலோ, சம்பந்தப்பட்டவர்களை வீட்டுத் தனிமையை நிறைவு செய்து கொள்ள அறிவுறுத்தலாம். வீட்டுத் தனிமையை நிறைவு செய்தவர்கள் மீண்டும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளத் தேவையில்லை. மருத்துவமனையில் உள்ள கொரோனா நோயாளிகளை அவர்களது உடல் நிலையைப் பொருத்து வீட்டுக்கு அனுப்பலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: