பணியாளர் பட்டியலில் இல்லாதவர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை : அறநிலையத்துறை விளக்கம்

சென்னை : அகவிலைப்படி உயர்வு பணியாளர்கள் பட்டியலில் இல்லாதவர்களுக்கு பொருந்தாது என்று இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இக்கோயில்களில் சுமார் 20 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இதில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிரந்தரப் பணியாளர்களுக்கு மட்டும், அரசு பணியாளர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதையடுத்து, கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 31 சதவீதமாக உயர்ந்தது.  ஆனால், இந்த உத்தரவை தினக்கூலி பணியாளர்கள் மற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு பொருந்துமா என்ற எதிர்பார்ப்பு ஊழியர்கள், அதிகாரிகள் தரப்பில் எழுந்தது. இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் அனைத்து சார்நிலை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படி 14 விழுக்காடு உயர்வு செய்து 31 விழுக்காடாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அரசாணையின் அடிப்படையில், ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேல் உதவித்தொகை நிர்ணய வருமானம் வரப்பெறும் அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் உள்ள கோயில்களில் பணிபுரிந்து வரும் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியை 17 விழுக்காட்டுலிருந்து 14 விழுக்காடு உயர்வு செய்து (அந்தந்த கோயில் நிதிநிலை மற்றும் விதிமுறைகளுக்கேற்ப அரசு நிர்ணயித்துள்ள செலவின விழுக்காட்டுக்கு மிகாமல்) 31 விழுக்காடுகாடாக நிபந்தனைகளுக்குட்பட்டு வழங்கிட அனுமதி வழங்கப்படுகிறது.

இதன்படி, இந்த அகவிலைப்படி உயர்வு உத்தரவானது பகுதி நேர பணியாளர்கள், தினக்கூலி பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறுவோர் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் பட்டியலில் இடம் பெறாதவர்களுக்கு பொருந்தாது. அனைத்து சார்நிலை அலுவலர்கள் தத்தம் அதிகார வரம்புக்குட்பட்ட கோயில்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இந்த உத்தரவு முறையாக அமலாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: