சென்னையில் இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு: காவல்துறை

சென்னை: சென்னையில் இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 103 வழக்குகள் செய்யப்பட்டு,  307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு 06.01.2022 முதல் 31.01.2022 வரை வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர முழு ஊரடங்கும், ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுகிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளை தீவிரப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு, சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு சட்டம் மற்றும் ஒழுங்கு, போக்குவரத்து மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த 10,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று (15.01.2022) இரவு 10.00 மணி முதல் இன்று (16.01.2022) காலை 05.00 மணி வரை இரவு நேர ஊரடங்கில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர்கள் தலைமையில், இணை ஆணையாளர்கள், துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையில், சட்டம், ஒழுங்கு, போக்குவரத்து, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் கொண்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, இரவு நேர ஊரடங்கில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 280 இருசக்கர வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், நேற்று (15.01.2022) கொரோனா தடுப்பின் முக்கிய வழிகாட்டுதல் நெறிமுறையான முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.10,93,800/- அபராதமும், சமூக இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.13,500/- அபராதமும் வசூலிக்கப்பட்டது.

இன்று (16.01.2022) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சென்னை பெருநகர காவல் குழுவினர் நாளை (17.01.2022) காலை 05.00 மணி வரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதால், பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: