19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயிலில் சிக்கி பலி: கோவை பகுதியில் தொடரும் காட்டு யானைகள் உயிரிழப்பு

கோவை: தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், காடுகளை பாதுகாப்பதிலும், வனப்பரப்பை அதிகரிப்பதிலும் யானைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. யானைகள் எண்ணிக்கை பெருகினால்தான் காடுகள் வளரும். காடுகள்தான் மழைக்கும், ஆக்ஸிஜனுக்கும் மிக முக்கிய ஆதாரங்கள். அதைப்போல இந்தியாவில் போக்குவரத்திற்கு மிக முக்கிய உயிர்நாடியாக விளங்குவது ரயில்வே துறை ஆகும். தென்னக ரயில்வேயை பொருத்தவரையில் செங்கோட்டை-கொல்லம், கோவை-பாலக்காடு, சேலத்தில் இருந்து ஓசூர் வழியாக பெங்களூரு செல்லும் வழித்தடம் என இந்த மூன்று ரயில் வழித்தடங்களும் அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக செல்கின்றன.

இதில், கோவை-பாலக்காடு வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, காட்டு யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. ரயில் வளைவுகளில் விபத்து ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம். அடர் வனப்பகுதி என்பதால் வளைவுகளில் தூரத்தில் பார்வை தெரியாது. மேலும், இரவு நேரங்களில் ரயிலின் விளக்குகளுக்கு யானையின் கருப்பு நிறம் அருகில் வந்த பின் தான் கண்டுபிடிக்க முடிகிறது. தண்டவாளங்கள் 10 முதல் 15 அடி மண் நிரப்பி உயரங்களில் அமைக்கப்படும்போது தண்டவாளத்தின் இருபுறமும் யானைகள் ஒதுங்குவதற்கும் இடம் இல்லை. மேலும் யானைகள் இறங்கி செல்லும் வகையில் சரிவுகள் இல்லாததும் முக்கிய காரணங்களாக கண்டறியப்படுகிறது.

அதிகப்படியான ரயில்கள் குறிப்பிட்ட வழிதடங்களில் இயங்குவதாலும், அதிவேகத்துடன் இயங்குவதாலும் யானைகள் ரயில் தண்டவாளத்தில் குறுக்கிடும் போது யானைகள் மீது மோதி உயிரிழக்க நேரிடுகிறது. கல்குவாரிகள், சிமென்ட் தொழிற்சாலைகள், கட்டுமானங்கள் ஆகியவை வனப்பகுதிக்குள் நடைபெறும்போது யானைகள் தங்களுடைய இருப்பிடங்களை அடிக்கடி மாற்றும் சூழல் ஏற்படுகிறது. இதனால், ரயில் தண்டவாளங்களை யானைகள் அடிக்கடி கடக்கும் பகுதிகள் இல்லாமல், திடீரென புதிய பகுதிகள் வழியாகவும் கடந்து செல்கின்றன. இதனாலும் ரயில் விபத்தில் யானைகள் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் போத்தனூர் சந்திப்பு மற்றும் கஞ்சிக்கோடு ரயில் நிலையங்களுக்கு இடையே கடந்த 2002ம் ஆண்டு முதல் 2010ம் ஆண்டு வரை 8 வருடத்தில் 13 யானைகள் ரயில் மோதி இறந்துள்ளன. இதில், 2008ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி போத்தனூர் மற்றும் மதுக்கரை ரயில் நிலையங்களுக்கு இடையே நடந்த ஒரு ரயில் விபத்தில் 3 யானைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை 8 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன. கோவை - பாலக்காடு ரயில் வழித்தடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு யானைகள் உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கடந்த 19 ஆண்டுகளில் 29 யானைகள் ரயில் மோதி உயிரிழந்துள்ளன.

தீர்வு என்ன..?

ரயில்வே துறை மற்றும் வனத்துறைகள் இணைந்து ரயில் மோதி யானைகள் இறந்த விபத்து பகுதிகளின் பழைய தரவுகளை எடுத்து ஒரு வரைபடமாக வரைய வேண்டும். அதன்அடிப்படையில், ரயில் ஓட்டுனர்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். மேலும், யானைகள் அதிகம் கடக்கும் பகுதிகளை கண்டறிந்து ரயில் வழித்தடங்கள் அடியில் யானைகள் கடப்பதற்கு சுரங்கப்பாதைகள் மற்றும் வெளிநாடுகளில் அமைக்கப்பட்டு உள்ளதைப்போல ரயில் தண்டவாளங்களுக்கு மேலே மேல்மட்ட பாலங்கள் அமைத்து வனவிலங்குகள் கடந்து செல்லும் வகையில் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். மேலும் தண்டவாளங்களில் இருபுறமும் இயற்கையான முள் செடிகள் அமைத்து தண்டவாளத்தை யானைகள் நெருங்காதவாறு வேலி அமைக்க வேண்டும். அப்போதுதான் ரயில் மோதி யானைகள் உயிர் இழப்பதை தடுக்க முடியும்.

Related Stories: