காவேரிப்பாக்கம் பகுதியில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு பஸ்கள் வராததால் பயணிகள் வேதனை: அதிகாரிகள் நடவடிக்கைக்கு கோரிக்கை

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது காவேரிப்பாக்கம் பேரூராட்சி. இப்பகுதியில் பத்திர பதிவு அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண்மை அலுவலகம், வங்கிகள், வருவாய் அலுவலர் அலுவலகம், காவல் நிலையம், உள்ளிட்டவைகள் அமையப்பெற்றுள்ளது. இதனால் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த அத்திப்பட்டு, திருப்பாற்கடல், ராமாபுரம், கடப்பேரி, கட்டளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் பேருந்து நிலையம் வந்து செல்கின்றனர்.

இதனால் பஜார் வீதி, பேருந்து நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் பரப்பரப்பாக காணப்படும். மேலும் காவேரிப்பாக்கம் பேரூராட்சி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக, பழைய பேருந்து நிலையம் தகற்கப்பட்டு, ₹3 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் கடந்த 8ம் தேதி காணொலி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த பேருந்து நிலையம் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அவ்வாறு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உள்ளே வந்து செல்லாமல், தேசிய நெடுஞ்சாலையிலேயே நின்று பயணிகளை ஏற்றி செல்கின்றன.

இதனால் பஸ்சிற்காக பஸ் நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் ஏமாற்றமடைகின்றனர். மேலும், ஒரு சிலர் தேசிய நெடுஞ்சாலையில் பஸ்சிற்காக வெயில் மற்றும் மழைக்காலங்களில் கால்கடுக்க காத்திருக்கின்றனர். எனவே  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, அனைத்து பேருந்துகளும் பஸ் நிலையத்திற்கு உள்ளே வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: