×

கொரோனாவை கட்டுப்படுத்த 2வது முறையாக நடந்த முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்..!

சென்னை: கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நேற்று இரவு 10 மணிக்கு தொடங்கிய முழு ஊரடங்கு நாளை காலை 5 மணி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அனைத்து சாலைகளும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கடந்த 6ம் தேதி இரவு முதல் நேற்று அதிகாலை 5 வரை ஊரடங்கு பிறப்பித்தது. மேலும், ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு நடைமுறைப் படுத்துப்படும் என்று அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் கடந்த 9ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று 2 வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது. ஏற்கனவே நேற்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதால் மாநிலம் முழுவதும் போலீசார் மாவட்ட எல்லைகளில் சோதனை சாவடிகள் அமைத்து தீவிரமாக கண்காணித்தனர்.

சென்னையை பொருத்தவரை, சென்னை மாநகர போலீஸ் சார்பில் 312 இடங்களில் வாகன சோதனை சாவடிகள், தாம்பரம் காவல் ஆணையரகம் சார்பில் 32 இடங்களில் வாகன சோதனை சாவடிகள், ஆவடி காவல் ஆணையரங்கம் சார்பில் 109 என மொத்தம் சென்னை முழுவதும் 457 ேசாதனை சாவடிகள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளில் சுழற்சி முறையில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கின் போது ரயில் மற்றும் விமானம் மூலம் வெளியூர் செல்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பொதுமக்கள், ரயில் நிலையம் மற்றும் விமான நிலையம் செல்வதற்கு ஆட்டோவில் செல்ல முன்பதிவு டிக்கெட்டுகள் நகல் வைத்துள்ளார்களா என்றும், ஆட்டோ மற்றும் டாக்சி ஓட்டுநர் காண்பிக்கும் டிக்கெட் நகலினை சோதனை செய்யும் போது, அதில் குறிப்பிட்டிருக்கும் தேதி, நேரம் மற்றும் வழித்தடங்களை ஆய்வு செய்து, உறுதி செய்த பின்னரே ஆட்டோ அல்லது டாக்சி செல்ல அனுமதித்தனர்.

அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். முழு ஊரடங்கை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், செந்தில்குமார் தலைமையில் துணை கமிஷனர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மாநகர போலீஸ் அதிரடி நடவடிக்கையால் நேற்று இரவு முதலே மாநகரம் முழுவதும் முக்கிய சாலைகளான அண்ணாசாலை, வடபழனி 100 அடி சாலை, காமராஜர் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஓஎம்ஆர் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் நெடுஞ்சாலைகள் என அனைத்து சாலைகளும் வெறிச்சோடியது.

மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகள், பூங்காக்கள், மீன் மார்க்கெட்டுகள், கோயம்பேடு மார்க்கெட், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது. முழு ஊரடங்கின் போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டது. ஆனால் அதில் பயணம் செய்த நபர்களிடம் என்ன தேவைக்கு செல்கிறீர்கள் என்றும், அடையாள அட்டையை பரிசோதனை செய்த பிறகே ரயில் நிலையத்திற்குள் போலீசார் அனுமதி அளித்தனர். முதன்மை சாலைகள் மற்றும் அனைத்து மேம்பாலங்களையும் போலீசார் தடுப்புகள் அமைத்து வாகன சோதனைகளில் ஈடுபட்டு, அத்தியாவசிய தேவைக்கான வாகனங்கள் மட்டும் அனுமதித்து வருகின்றனர்.

தடையை மீறியும் வாகனங்களில் சுற்றிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் முகக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற நபர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இந்நிலையில் இன்று காணும் பொங்கல் என்பதால் கடற்கரை, பொழுது போக்கு பூங்காக்களில் மக்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி பொதுமக்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக மெரினா கடற்கரை, பட்டினப்பாக்கம், திருவான்மியூர், கோவளம் கடற்ரை, பூங்காக்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் பல இடங்களில் போலீசார் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஜிஎஸ்டி சாலை, பெங்களூர் நெடுஞ்சாலைகளிலும் போலீசார் சோதனைச் சாவடிகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல தமிழகம் முழுவதுமே போலீசார் வாகனச் சோதனை நடத்தினர். முகக் கவசம் அணியாமல் நடந்து சென்றவர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags : Roads deserted for the 2nd time to control the corona ..!
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை பற்றி தவறான...